சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர்.
அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ்.
முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
