மகனுக்கு பொறுப்பு வழங்குவதில் ஏன் தயக்கம்? – ராமதாஸுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள்!

Published On:

| By Selvam

Anbumani supporters criticize ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜூலை 15-ஆம் தேதி முதல் மாவட்ட பொதுக்குழுவை அன்புமணி கூட்டியுள்ளார்.

இதற்கு போட்டியாக விரைவில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட இருப்பதாக ராமதாஸ் இன்று (ஜூன் 13) அறிவித்துள்ளார். தந்தை, மகனுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ராமதாஸ்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பாமகவில் குழப்பமான ஒரு சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் வெளியிட்ட பதிவுகள்…

சூரிய பிரகாஷ்

கட்சிக்கு வெளியில் இருந்து இன்று அய்யா மீது திடீர் பாசமழை பொழியும் எல்லா திருட்டு பயல்களும் இந்த கட்சி நாசமாக வேண்டும் என்று தான் உருட்டுகிறார்கள்.

ADVERTISEMENT

ஒருவேளை நிலைமை உள்டாவாக அய்யா பின்னால் மொத்த கூட்டமும் போயிருந்தால் அண்ணனுக்காக விழுந்து புரண்டு ரைட் அப்களும், யூடியூப் பேட்டிகளுமாக கண்ணீர் வடித்து தள்ளி இருப்பார்கள். Anbumani supporters criticize ramadoss

அவர்கள் எண்ணம் என்று தான்.. 100 ஆக இருக்கும் பாமக 10 பத்தாக நொறுங்க வேண்டும். குறைந்தபட்சம் 50-50 ஆகவாவது உடைய வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால் இன்று கிட்டத்தட்ட 99% கட்சி அண்ணன் பின்னால் திரண்டு நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்னும் சொல்லபோனால் அய்யாவை முன்வைத்து அவர்கள் செய்த பல விமர்சனங்களை கூட இனி ரொம்ப செய்ய முடியாது. ஏற்கனவே அன்புமணி அண்ணனுக்கு பிற சாதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இனி அவர் வளர்ச்சி பல மடங்கு இருக்க போகிறது. இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ நம் எதிரிகள் உணர்ந்து உள்ளார்கள். அதனால் தான் அவர்களுக்கு இந்த பதட்டம்.

இனி அடுத்தடுத்து சாரை சாரையாக பல முனைகளில் இருந்தும் பாமகவை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பார்கள். அப்போது இது தெளிவாகும்.

அண்ணனின் முழு சுதந்திரமான, அனுசரணையாக, தட்டி கொடுத்து வேலை வாங்கும் இயல்பினால் அதிருப்தியில் இருந்த வன்னியர்களும் கூட்டம் கூட்டமாக மீண்டும் பாமகவில் வந்து சேருவார்கள்.

2026 இல் பாமக வரலாற்றில் இல்லாத அளவு அதிக வாக்குகளை வாங்கும். ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்கும். அப்போது “இதை ஏன் முன்னரே செய்யவில்லை” என்று நாம் யோசிக்கும் நிலை வரும்.

தமிழ்வாணன் கோவிந்தன்

மகளிருக்கு பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு கேட்டவர் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்தான். அவரே இன்று பொதுவாழ்விற்கு பெண்கள் வரக்கூடாது என்ற பொருளில் கூறியதை ஏற்க முடியாது. சமூகநீதியை பேசுபவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா, அய்யா?

மோகன் சாமிக்கண்ணு

தந்தை மகனுக்கு பொருத்தமான நேரத்தில் பொறுப்புகளை வழங்குவதன் நன்மைகள்: மகனின் தன்னுற்பத்தித் திறன் வளர்கிறது

மகன் தனது திறமைகளை வெளிப்படுத்தவும், புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.

மகன் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையுடன் செயல்படத் தொடங்குகிறான். மகன் தவறு செய்தாலும், அவனோடு பொறுமையாக பேசி, அவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுப்பை தட்டி பறிக்க கூடாது அது குடும்பத்தை அழிவில் கொண்டு சென்றுவிடும். நாளும் தெரிந்த அனுபவசாலி குலம் செழிக்க துணை புரிய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்

உத்தமன்

அய்யா அவர்களின் வயது மூப்பின் காரணமாக மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசி வருகிறார்,
இந்த சூழ்நிலையை சில கயவர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்,
நாளைய தமிழகம் 108ன் நாயகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்க்கு உங்களை தம்பி நாமக்கல் ச.கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு அன்பு வேண்டுகோள்:
அந்த கயவர்களை விரட்டி அடிக்க ஒரு மாத காலம் நீங்கள் தைலாபுரத்தில் இருந்து அரசியல் பணி செய்தாலே சரியாக இருக்கும்.

ராம காளிமுத்து

ஒரு மாபெரும் சமூகம் இங்கே சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் எல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறி வருகிறது.

முடியும் என்ற முடிவுரை கூட இங்கே முற்று பெறாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. இட ஒதுக்கீடு களத்தில் போராடி வீர மரணம் அடைந்த போராளிகளின் வழித்தோன்றல்கள் ஒருபுறம் நடக்கும் இந்த இதயத்தை சுக்குநூறாக்கும் யுத்தத்தில் மொத்தமுமாய் சிதைந்து போய்விட்டார்கள்.

கட்சி சங்கம் என இன்றும் வறுமையில் வாழ்ந்து உடுத்த வழியின்றி இருக்கும் ஒற்றை கரைவேட்டியோடு மாற்றானிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்த எனது கிராமத்து கடை கோடி சொந்தம் அங்கே அவமானத்தை தாங்க முடியாமல் எதிரிகளின் கேளிக்கைக்கு பயந்து பாதை மாறி பயணிக்கிறது அவர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என.

நேற்று வரை முறுக்கிய மீசையோடு திமிறிய தோளில் துண்டை போட்டு எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்த அந்த கிராமத்து துடுக்கான பெரியவர் கூட துவண்டு போய் கிடக்கிறாரே தூக்கி நிறுத்த எவருமின்றி.

தன்னை ஏசினால் கூட எதற்கும் அஞ்சாத அந்த ஏழை தொண்டன் தன் தலைவனை ஏசும்போது மட்டும் எகிறித் துடிக்கிறான் “என் ஐயாவை பார்த்தா அப்படி சொல்கிறாய்”என்று.அவனைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை அரசாண்ட அந்த மன்னவனுக்கு.

“யாரு உங்க மவன் தானே வுட்டுட்டு போங்கயா” அப்படின்னு ஊர் தோறும் சொல்லுறாங்களே உங்களுக்கு கேட்கலையா இந்த ஊமை ஜனங்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லும் உங்களுக்கு விளங்கலையா.

தன் பிள்ளைகள் தன் கண்முன்னே அடித்துக் கொள்வதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான். நீங்கள் எங்களை பிள்ளைகளாக நினைக்கவில்லையா?

உங்கள் பிள்ளையையே நீங்கள் அரவணைக்க நினைக்காத போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் உங்களுக்கு.

நாங்கள் எல்லாம் மனக்கோட்டை கட்டினோம். உங்கள் இறுதி பயணம் பெரும் கூட்டத்தோடு இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று.

உங்களைத் தூற்றியவனோடும் உங்களை பழித்தவனோடும் பாரபட்சமின்றி பகைமையை சம்பாதித்து இருக்கிறோம். அவன் இன்று உங்களைப் பற்றிக் கொண்டு படம் எடுத்துக் காட்டுகிறான் பாருங்கள் நான் உங்கள் ஐயா பக்கத்தில் என்று.

இணையத்தில் ஓராயிரம் வலிகள் நிறைந்த வன்ம வார்த்தைகள் உங்களை பழித்தவர்களின் பக்கங்களில் பரவி கிடக்கிறது படித்துப் பாருங்கள் ஐயா. பகட்டு அரசியலை தூக்கிப்போட்டுட்டு பாவ மன்னிப்பை தேடிப் போவீர்கள்.

நீதியை நிதி வென்று விட்டது மீதியை பழி வென்று விட்டது பாழாய் போன இந்த பாட்டாளிகளுக்கு படுக்கையில் கூட நிம்மதி இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு ராமதாஸுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share