பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், “எனக்குள் அவ்வளவு வலி இருக்கிறது. ஐயா இல்லாமல் நாம் இல்லை” என்று உருக்கமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன் இன்று (ஆகஸ்ட் 9) மாமல்லபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்று வருகிறது.
இதில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பேசியதை தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “
என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் இது வீண் போகாது. உங்களை பொறுப்புடன் வழி நடத்துவேன்.
மருத்துவர் ஐயா தான் நமது வழிகாட்டி, அவர்தான் எல்லாமே. அவரது லட்சியமான வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அடுத்தது யார் வரவேண்டும் என்பதை சிறிது காலத்திலும் முடிவு செய்வோம். நல்ல கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வருவோம்.
உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பது நன்றாக தெரியும். உங்களுடைய விருப்பப்படி தான் அந்த கூட்டணி அமைக்கப்படும்.
தேசிய அளவில் திமுக வெறும் 1.25 சதவீதம் வாக்குகள் தான் பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு மாநிலத்தை ஆள்கிறது. வருகின்ற தேர்தலில் பாமக சார்பில் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் ஆட்சி நமது தான். அதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.
உருவத்தில் ஐயா இங்கு இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்.
இருக்கின்ற ஆறு மாத காலத்தில் அனைவரும் கடுமையாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். ஐயா வரவில்லை என்றாலும் அது அவருக்காக தனி நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது அது நிரந்தரமானது. அவர் எப்போது வேண்டுமானாலும் அதில் வந்து அமரலாம். இங்கு சாமி பிரச்சினை இல்லை. பூசாரி தான் பிரச்சினை.
ஐயா தேசிய தலைவர். சமூக சீர்த்திருத்தவாதி. 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர். சமூக நீதி என்னவென்று அவர்தான் பாடம் கற்றுக்கொடுத்தார். ஆனால் ஐயா, இந்த கட்சியை நிர்வகிக்க சில சூழல் இருக்கிறது. சிலவற்றை என்னால் வெளியில் சொல்ல முடியாது.
நான் பிடிவாதகாரன் கிடையாது. இந்த பதவிதான் எனக்கு வேண்டுமென்றால் 15 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு வாங்கியிருப்பேன். அது என்னுடைய நோக்கமல்ல. இந்த சமூதாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
ஐயாவை சுற்றி ஒரு சில தீய சக்திகள், சுயநலவாதிகள், குள்ளநரி கூட்டங்கள் உள்ளன. அவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான் சொல்லாததை எல்லாம் பொய்களை எல்லாம் அவரிடம் கூறுகிறார்கள். அவ்வளவு வலியை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். தூங்கியே பல நாட்கள் ஆகிறது. எல்லாவற்றையும் நாம் தாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனெனில் ஐயா தான் நமக்கு எல்லாம்.
தினம் என்னைப்பற்றி செய்தி வந்துக்கொண்டிருக்கிறது. இதை செய்துவிட்டான், அதை செய்துவிட்டான் என வருகிறது. அதற்கு நான் பதில் சொன்னால் ஐயா பெயர் கெட்டுப்போய்விடும்.
இரண்டு பேர் சேர்ந்து போட்டால் தான் அது சண்டை. நேற்று கூட நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. வருத்தமாக இருந்தது. யாரை எதிர்த்து அந்த தீர்ப்பு… நமக்குள்ளேயே ஒரு தீர்ப்பா? அது ஒரு தீர்ப்பா?. இது வெற்றி என்று நான் நினைக்கவில்லை.
நமது கட்சி நமக்கு குடும்பம். கடைசி வரை இதுதான் எனது விருப்பம். நான் ஊடகத்திடம் மணிக்கணக்கில் பேசுவேன். ஆனால் இப்போது நான் மீடியாவை சந்தித்து இரண்டு மாதம் ஆகிறது.
ஏன்… என் வாயில் இருந்து எதையாவது பிடிங்கி, திரும்ப திரும்ப போட்டுக்கொண்டே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் நடைப்பயணத்தின் போது மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சினைகளை கேட்டது குறித்து பேசிய அன்புமணி, ராணிப்பேட்டையில் குரோமியம் கலக்கப்பட்ட கழிவு நீரை நிலத்தடி நீர் மூலம் குடித்து வருவதால் அங்குள்ள மக்களுக்கு அதிகமாக கேன்சர் வருவதாக அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டியூட் கூறுகிறது. ஆனால் எங்கேயாவது ஒரு பேட்டி கொடுத்தால், அதை பூதாகரமாக்கி எவ்வளவு மக்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த இயக்கத்துக்கும் நிரந்தர தலைவர் கிடையாது… தலைவரை தேர்வு செய்வது பொதுக்குழு உறுப்பினர்களாகிய நீங்கள்தான். இப்போது எனக்கான அந்த பொறுப்பை ஓராண்டுகாலம் நீட்டித்திருக்கிறீர்கள்…
இந்த நேரத்தில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற வேகத்தில் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு நாம் நமக்குள்ளேயே பதிவுகள் போட்டுக் கொண்டு, வழக்கு போட்டுக்கொண்டு இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். கனவில் கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்ததில்லை. நான் பிடிவாதமாக இல்லை. உறுதியாக இருக்கிறேன். நிச்சயமாக நான் சுயநலவாதிகளுக்கு வழி விட மாட்டேன்” என்றார்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், “ முதலமைச்சர் எதையோ கணக்கில் வைத்துக்கொண்டு இன்னும் 8 மாதம்தான் இருக்கிறது ஏமாற்றிவிடலாம் என நினைத்து வருகிறார். ஆனால் நாங்கள் விடமாட்டோம். ஸ்டாலின் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக அனுபவிக்க இருக்கிறார். ஒழுங்காக இட ஒதுக்கீடு கொடுத்து விடுங்கள். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1226 நாட்கள் ஆகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கின்றது.
திமுக அரசு பட்டியல் சமுதாயம் வன்னியர் சமுதாயம் ஆகிய இரண்டு சமுதாயங்களையும் ஏமாற்றி வருகிறது. சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. சமூக நீதியின் விரோதிகள் திமுக” என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, “ஆலந்தூர் பட்டு ரோட்டில் 40 ஆண்டு காலமாக வன்னியர் சமூக அலுவலகம் இருந்து வருகிறது. அதை மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள் இதை திமுக அரசு மூடி சீல் வைத்திருக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ கொள்ளை அடிக்கிறார்கள். அதை கண்டு கொள்ளவில்லை ஏன் இவ்வளவு இந்த சமுதாயத்தின் மீது கோபம்.
ஒரு மாநிலத்திற்கு பிரச்சனை என்றால் தான் Attorney General-ஐ வைத்து வாதாடுவார்கள். ஆனால் இந்தப் பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றத்தில் இவரை வைத்து மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அதற்கே உச்ச நீதிமன்றம் முறையான தகவல்கள் பெறும் வரை பாமக விடமே அந்த அலுவலகம் இருக்கட்டும் என்று தீர்ப்பளித்தது.
இறுதியாக… நான் பிடிவாதகாரன் கிடையாது. அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது நோக்கம். என்னிடம் யாராவது பேசினால், நான் கன்வீன்ஸ் ஆகிவிடுவேன். பல செய்திகளை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதே நேரம், என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். உங்களை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என தனது உரையை முடித்தார் அன்புமணி.
