பொதுத் தேர்வா, நீட் தேர்வா: தெளிவுபடுத்துமா அரசு?

Published On:

| By admin

தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருப்பதால் இதுதொடர்பாக அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு வருகிற ஜூலை 17ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச்சூழலில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அதே வேளையில், தமிழக அரசு விலக்கு பெற முயன்று வருகிறது. இதனால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என தமிழக கிராமப்புற மாணவர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

ADVERTISEMENT

2022ம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது. அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது!

நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும். 12ஆம் வகுப்புத் தேர்வா… நீட் தேர்வா… எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும்!

ADVERTISEMENT

இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெறச் சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share