ADVERTISEMENT

“சாம்சங் நிறுவனத்தின் கைப்பாவையாக மாறிய தமிழக அரசு”: அன்புமணி விமர்சனம்!

Published On:

| By Minnambalam Login1

anbumani ramadoss samsung protest

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளின் கைதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்டோபர் 9) தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்தல்,ஊதிய உயர்வு, உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (அக்டோபர் 8) இரவு சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பலரை அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்த கைதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் இன்று(அக்டோபர் 9) பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள் விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

”ரெப்போ வட்டி விகிதத்தில் 10வது முறையாக மாற்றமில்லை” : ரிசர்வ் வங்கி

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை!

ரூட் தல பிரச்சினையால் நேர்ந்த சோகம் : கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share