தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். anbumani ramadoss condemns
மருத்துவ மேற்படிப்பிற்கான முதுநிலை நீட் தேர்வு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் அதற்கு முன் ஜூன் 18-ஆம் தேதி நடந்த UGC-NET வினாத்தாள் டார்க் நெட்டில் வெளியானதால், ஜூன் 19-ஆம் தேதி UGC NET ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக முதுநிலை நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. மாற்றுத் தேதியாக ஆகஸ்ட் 11 அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. இதனை அடுத்து, எம்.பி.க்கள் சச்சிதானந்தம் வில்சன், வில்சன் ஆகியோர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் அளித்தனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தேசிய தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்தது.
அன்புமணி கண்டனம்
இந்நிலையில்தான், தருமபுரி மாணவி ஒருவருக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அன்புமணிராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ” இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு – காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதில் “முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்தது. அப்போதும் தமக்குக் காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி அங்குத் தேர்வு எழுதச் சென்ற பின்னர், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் வெறுங்கையுடன் திரும்பிய தமக்கு பெரும் செலவு ஏற்பட்டதாகவும் அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் 4 மையங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் உறுதியளித்திருந்தது.
ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு மீண்டும் காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்குக் கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு மையம் அறிவித்தது. ஆனால், தருமபுரி மாணவி உள்ளிட்ட பலருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்படவே இல்லை.
பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்?
இதனால் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்” என்று அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Comments are closed.