வைஃபை ஆன் செய்ததுமே, “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே பாமக விவகாரங்களை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Anbumani Praises Ramadoss
பாமகவில் அப்பா- மகன் இடையேயான மோதல் உக்கிரத்துக்கும் அப்பால் உக்கிரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்குவதாக ராமதாஸ் அறிவிக்கிறார்; அன்புமணியோ, நீக்கப்பட்டவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கடிதம் தருகிறார். இந்த அக்கப்போருக்கு ‘எண்ட் கார்டே’ இல்லையா? என பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி தொடங்கி கடைசி வன்னிய சொந்தம் வரை புலம்புகின்றனர்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸும், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் அன்புமணியும் ஆலோசனைகள் நடத்தினர்.
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் கண்ணீரும் கம்பலையுமாக ராமதாஸ் பேட்டியளித்ததற்கு அன்புமணி தரப்பில் காட்டமாக எந்த எதிர்வினையும் வரவில்லை.. பிரச்சனையை அன்புமணி ‘லாவகமாகவே’ கையாள்கிறாரே.. என்னவாக இருக்கும் என பாமகவினரிடம் பேசினோம்.
பாமகவினரோ, ‘அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான பிரச்சனை எல்லை கடந்து போய்விட்டது.. இருவரையும் ஒன்றுசேர்க்கவே முடியாதோ.. பாமக உடைந்தே போய்விடுமோ என்றுதான் பயந்தோம். ஆனால் இந்த நிலைமை மாறும் என்கிற அளவுக்கு அன்புமணியின் ரியாக்ஷன்கள் இருக்கின்றன’ என்கின்றனர்.

அன்புமணி இப்படி ‘சைவ’ மோடுக்கு மாறியிருப்பது ஏன் என கேள்வி கேட்டால், எல்லாத்துக்கும் ஜிகே மணியின் அட்வைஸ்தான் என்கின்றனர் பாமகவினர்.
ஜிகே மணியா? அவரைத்தான் அன்புமணி குடும்பத்துக்கே பிடிக்காதே?
டாக்டர் ராமதாஸின் பேட்டி, அதனைத் தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கம் என தைலாபுரம் தகித்துக் கொண்டிருக்க, ‘இதை எல்லாம் செய்ய வேண்டாம் அய்யா’ என தடுக்க முயற்சித்திருக்கிறார் ஜிகே மணி. ஆனால் வழக்கம் போல ஜிகே மணியை ‘ஒருமையில் திட்டிவிட்டு’ ‘அவனா? நானா’ என ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்.. என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் போறேன் என ரொம்பவே கோபப்பட்டாராம் டாக்டர் ராமதாஸ்.
இதனைத் தொடர்ந்துதான் செய்தியாளர்களிடம், நானும் சொல்லித்தான் பார்த்தேன்.. டாக்டர் அய்யா கேட்கலை.. நான் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்னும் சொல்லிப் பார்த்தேன் என புலம்பிவிட்டார் ஜிகே மணி.
இதன் பின்னர் அன்புமணியை தொடர்பு கொண்டு பேசிய ஜிகே மணி, ‘அப்பாவோட கோபம் தெரிஞ்சதுதான்.. இந்த கோபம் குறையும் வரைக்கும் நீங்க கடுமையாக பேசாதீங்க.. அய்யாவை உயர்வாகவே பாராட்டிப் பேசுங்க.. அய்யாதான் நமக்கு குலசாமி.. அய்யாவின் வழிதான் நடப்போம்..அய்யாவின் கொள்கைகளைத்தான் செயல்படுத்துவோம் என தொடர்ந்து பேசிகிட்டே இருந்தீங்கன்னா அவரோட கோபமும் குறையும்தானே’ என்றாராம்.

அன்புமணியும் சரி என ஏற்றுக் கொண்டு. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், டாக்டர் அய்யாதான் எங்களது குலசாமி.. குலதெய்வம் என சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பதைப் போல பேசினாராம்.
இப்படி அன்புமணி பேசிய பின்னராவது டாக்டர் கோபம் குறையுமா? என்ற நம் கேள்விக்கு பொறுத்திருந்துதான் பார்க்கனும் என்கின்றனர் பாமகவினர் என டைப் செய்தபடியே Send பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.