வருகின்ற மே மாதம் 11-ம் தேதி மாமல்லபுரம் வட நெமிலி பகுதியில் திருவிடந்தை கிராமத்தில் சித்திரை நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது, இந்த மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா இன்று (ஏப்ரல் 16) காலை நடைபெற்றது.
பாமகவில் டாக்டர் ராமதாஸுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று இந்த பந்தக்கால் நடும் விழாவில் அன்புமணி, பாமக கௌவர தலைவர் ஜி.கே.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். Anbumani performed pooja for chithirai full moon conference
குறிப்பாக அன்புமணிக்காக டாக்டர் ராமதாசை விமர்சித்து, அதற்கு பதிலடியாக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாமக பொருளாளர் திலகபாமாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மேலும், அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, பந்தக்காலை தொட்டு வணங்கினார்.
திருவிடந்தை கிராமத்தில் வைணவ குருமார்களால் நடத்தி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் அவர்கள் அன்புமணிக்கு சங்கல்பம் செய்து வைத்த மகாகணபதி பூஜையை நடத்தினார்கள்.
அதன்பின் பய பக்தியோடு புண்யாவஜனம் செய்யப்பட்ட புனித நீரை பந்தக் கால் குழியில் தெளித்த அன்புமணி… அந்த பந்தக்கால் மூங்கிலில் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு பயபக்தியோடு நட்டு வைத்தார்.

இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,
“மருத்துவர் ஐயா அவர்களுடைய வழிகாட்டுதலின்பேரில் நடக்க இருக்கும் சித்திரை முழு நிலவு மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பின்தங்கிய சமுதாய மக்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சமுதாயத்தினரும் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். Anbumani performed pooja for chithirai full moon conference
இது வன்னியர் சங்கம் சார்பிலே நடத்தப்படுகின்ற மாநாடு. தமிழ்நாட்டில் சமூக நீதியை வென்றெடுக்க லட்சக்கணக்கான மக்கள் இங்கே கூட இருக்கின்றார்கள். இந்த மாநாட்டின் நோக்கம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதாகும். தமிழ்நாட்டை விட்டு மதுவையும் போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும்.
அதேபோன்று வடமாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருக்கிறது. கடந்த 60 – 70 ஆண்டுகாலமாக வட மாவட்டங்களில் வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரத்திலும், தனி நபர் வருமானத்திலும், மனித வளர்ச்சி குறியீடுகளிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
எனவே, வட மாவட்டங்களுக்கென சிறப்பு திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய தமிழக அரசை வலியுறுத்துகின்ற வகையில் இந்த மாநாடு நடைபெறும்” என்றார் அன்புமணி.