வங்கக்கடலில் மீன்பிடிக்கும்போது தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிகளில் மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்வது தொடர்கதையாகியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் பேசினார்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இலங்கை கடற்படையின் இந்த போக்கைக் கண்டித்து வருகிற அக்டோபர் 8ஆம் தேதி இலங்கை துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிகரித்துள்ள அடக்குமுறை
அந்த அறிக்கையில் “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதைச் சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும். இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது.
அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர் என்பதால், அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், அதை மதிக்காத சிங்கள கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது.
அதிகரித்துவரும் தண்டனை
கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கம் ஆவர். கடல் மீன்கள் ஏற்றுமதியால் மட்டும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது.
அவர்கள் எல்லையில்லாமல் இலங்கைச் சிறைகளில் வாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் பா.ம.க. சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ்… பாராட்டிய டிஜிபி!
ஈரான் செல்ல வேண்டாம் : இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!
பயணிகள் கவனத்திற்கு… விமான சேவைகளில் மாற்றம் – முழு விவரம் இதோ!