அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு – மருத்துவர் ராமதாஸ் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் இருவரும் கூட்டாக நேற்று அறிவித்தனர். இந்நிலையில் அன்புமணி கூட்டணி பேசுவது கேலிக்கூத்து என்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் இன்று (ஜனவரி 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,“டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியில் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி தனி ஒரு நபரான ராமதாஸால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. பாமகவின் தலைமைப் பதவியை இப்போது நானே எடுத்துக்கொண்டுள்ளேன். நிறுவனர் மற்றும் தலைவர் நான்தான்.

ADVERTISEMENT

அன்புமணியின் செயல்பாடுகளால் தலைமைப் பண்புகள் கொஞ்சம் கூட அவருக்கு இல்லை என்பதால் அந்தத் தலைமைப் பொறுப்பை நானே எடுத்துக்கொண்டேன். எனவே பாமக கட்சி என்னிடம்தான் உள்ளது. இதற்கு ஆதாரம் கடந்த செயற்குழு, பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். இதைப் பார்த்து ‘ராமதாஸுக்கு இவ்வளவு செல்வாக்கா? ராமதாஸிடம்தான் கட்சியே இருக்கிறது’ என்று கணித்திருப்பீர்கள். அன்புமணி என்ன அங்கு தனியாக ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எல்லோரும் பேசியிருப்பீர்கள்.

அந்த வகையில் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டோம். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் என்னிடம்தான் உள்ளனர். அவரிடம் பணத்திற்காக ஆசைப்பட்டு சில நபர்கள் ஓடியிருக்கிறார்கள். நான் உருவாக்கி பாசத்தோடு வளர்த்த சிலர் அங்கே கார் கொடுப்பார்கள், கலப்பை கொடுப்பார்கள், பணம் கொடுப்பார்கள் என்று ஓடி படம் எடுத்துக்கொள்கிறார்கள் – அது ஒரு பக்கம்.

ADVERTISEMENT

அன்புமணியின் துரோகத்தை கட்சியினர் எல்லோரும் புரிந்துகொண்டார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்களும் புரிந்துகொள்கிறார்கள். அன்புமணி எங்கே யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்ல, மற்றவர்களும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனென்றால் தந்தைக்கே இவ்வளவு துரோகம் செய்த ஒரு நபரை, தந்தையிடமிருந்து கட்சியை அபகரிக்க நினைத்த இந்தக் கும்பலுக்கா நாம் ஓட்டு போடுவது என்று மக்கள் இவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

அன்புமணி வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்திற்குப் போகலாம். இதை டெல்லி உயர்நீதிமன்றமே தெரிவித்துள்ளது.அன்புமணி பாமக சார்பில் கூட்டணி பேசுவது நேற்று நடந்த கூத்து. கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு.‘

ADVERTISEMENT

பாமகவிற்கு என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற, நான் இருக்கின்ற, நான் சேர்கின்ற கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதனால் நேற்று நடந்தது ஒரு கூத்து, ஒரு நாடகம்.

இதை தமிழக மக்கள் பார்த்து ‘ஏன் இப்படி இந்தப் பிள்ளை தந்தைக்கு எதிராக செய்கிறார்? எவ்வளவு பாடுபட்டு அவரைப் படிக்க வைத்தார், மந்திரியாக்கினார், ராஜ்யசபா பதவி வாங்கிக் கொடுத்தார், கட்சியின் தலைமைப் பொறுப்பையும் கொடுத்தார். ஆனால் தந்தைக்கு எதிராக இவ்வளவு கேவலமாக ஏன் இந்தப் பிள்ளை நடந்துகொள்கிறார்’ என்று பேசுகிறார்கள்.

இவர் செய்தது அடாவடி. இப்படி யாரும் செய்ய முடியாது, செய்யக்கூடாது என்றெல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது. என்னிடமும் வந்து சொல்கிறார்கள்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share