2026 தேர்தல் களத்தை நோக்கிய தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் டிசம்பர் 17 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில் பாமக வழக்கறிஞர் பாலு, இன்று (டிசம்பர் 11) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்று அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அங்கிருந்த புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்திய வழக்கறிஞர் பாலு, சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அன்புமணி கொடுத்தனுப்பிய கடிதத்தை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நிச்சயமாக இந்தப் போராட்டத்தில் தங்கள் கட்சியின் சார்பில் கலந்து கொள்வார்கள் என்று விஜய்யின் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் “எங்களால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது, எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்வது பொய்.
கலைஞர் உயிரோடு இருந்திருந்தால், “எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்லி இருக்கமாட்டார். தவறான ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.
தெலங்கானா,பிகார், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இது நடத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூட அழைப்பு விடுத்திருக்கிறோம்.
தவெகவை பொறுத்தவரை அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கத்தான் இன்றைய சந்திப்பு நடைபெற்றது. இதில், வேறு அரசியல் எதுவும் இல்லை” என்று கூறினார்.
முன்னதாக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, ‘தேர்தல் சமயத்தில் எதுவும் நடக்கலாம்” என்று அன்புமணி கூறியிருந்தார்.
அதுபோன்று, கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் அன்புமணி ராமதாஸ் நடத்தவிருந்த பரப்புரை திட்டத்தை, அதே நாளில் விஜய் நடத்தவிருந்த மக்கள் சந்திப்பிற்காக மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.
