தமிழ் வழி மாணவர்களின் எண்ணிக்கை குறைவா? – டேட்டாவுடன் பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதில்!

Published On:

| By Kavi

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. Anbil Mahesh reply to Dharmendra Pradhan with data

இந்தநிலையில் நேற்று (மார்ச் 12) மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டார்.

“தமிழ்நாட்டில் தற்போது 67% மாணவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தமிழ் வழிப் பள்ளிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை 54% (2018-19)-லிருந்து 36% (2023-24) ஆகக் குறைந்துள்ளது.

மாநிலத்தில் குறைந்தது 774 சிபிஎஸ்இ பள்ளிகள் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பித்து வருகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் வளர வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. திமுக அரசின் ஒவ்வொரு தனிப்பட்ட தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் வழியில் பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக பிரதான் கூறியிருந்த நிலையில் அதற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் (மார்ச் 12) அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,  “தமிழ்நாட்டின் கல்விமுறை சிறப்பாக உள்ளது. அதில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சீர் குலைக்க வேண்டாம்.

இது தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்ல. பல தசாப்தங்களாக முயற்சி செய்து, சோதனை செய்து, வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட ஒரு கல்வி முறையைப் பற்றியது.

எங்கள் மாநில கல்வி முறை சிறந்த வேலையையும், உயர்க் கல்வியையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த முடிவுகளை தருகிறது.

மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்து அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தொழில் துறைகளில் சிறந்து விளங்க பல தலைமுறை மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில பாடத்திட்ட பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்பதற்கான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்?

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Anbil Mahesh reply to Dharmendra Pradhan with data

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share