கல்வியில் பாஜக அரசின் தலையீடு மன்னிக்க முடியாதது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். anbil mahesh question to dharmendra pradhan
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 10) திமுக எம்.பி கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஒரு கட்டத்தில் தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக எம்.பி.க்கள், மாநில கல்வித் துறை அமைச்சருடன் வந்து என்னை சந்தித்து பேசினர். ஆனால் இப்போது தமிழ்நாடு அரசு யு டர்ன் அடிக்கிறது. சூப்பர் முதல்வரின் ஆலோசனையை கேட்டு யு டர்ன் அடிக்கிறார்கள் ” என்று கூறியிருந்தார்.
அவருக்கு பதிலளித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மத்திய கல்வி அமைச்சரின் மூர்க்கத்தனமான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கு புரிகிறதா? அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்டைத் திரும்பத் திரும்பச் சொல்கிறாரா? கல்வியில் பாஜக அரசின் தலையீட்டை மன்னிக்க முடியாது.
மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தத் துரோகத்தை நினைவில் வைத்திருப்பார்கள்.
என்.இ.பி என்பது கல்வி கொள்கை அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா. தமிழ்நாடு அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நம்முடைய எம்.பி.க்கள் கல்விக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது” என்று கூறியுள்ளார்.
தமிழகத்துக்கான நிதியை தர முடியுமா? முடியாதா என்று தர்மேந்திர பிரதானுக்கு கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலினின் பதிவை பகிர்ந்துள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பதில் கூறுங்கள் தர்மேந்திர பிரதான் அவர்களே” என்று பதிவிட்டுள்ளார். anbil mahesh question to dharmendra pradhan