”2027 இல் விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பார்” : அடித்துக் கூறும் அனலி ஹீரோயின்

Published On:

| By Kavi

Anali Movie Press Meet

எங்கெங்கிருந்தோ எதிர்ப்பு அம்புகள் வருகின்றன, தவெக தலைவர் விஜய்க்கு.

ஆனால் இப்படி ஒரு கோணி ஊசியும் குறுக்கால வந்து குத்தும் என்று விஜய் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.

ADVERTISEMENT

சிந்தியா லூர்டே என்பவர் தயாரித்துக் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி“. படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஸ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும்.

90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் (?) டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன்.

ADVERTISEMENT

இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். பி.வாசு சார் மகன் சக்தி வாசு தான் இந்த படத்தின் மெயின் வில்லன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனலி படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார்.

இப்போது வரும் படங்களில் கதையே இருப்பதில்லை. ஆனால் இயக்குனர் தினேஷ் தீனா சொன்ன கதை ஒரு நல்ல அழகான கதை. கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக் செல்லும், இறுதி காட்சி வரை உங்களை அமர வைக்கும். இறுதி வரை உங்களால் கதையை கணிக்கவே முடியாது.

ADVERTISEMENT

ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக் கொண்டேன். சினிமாவில் எந்த பின்புலமும் இன்றி வந்து சாதிப்பது கஷ்டம். ஒரு தயாரிப்பாளராக நான் நேர்மையாக இருக்கிறேன். எல்லோருக்கும் பேசியபடி சம்பளத்தை தந்திருக்கிறேன். ஷூட்டிங்கிலும் தினசரி பேட்டா முதற்கொண்டு அன்றைக்கே தந்திருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருவேன் என நினைத்தார்கள். ஆனால் தயாரிப்பாளராக நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அந்த விஷயத்துல நான் பக்கா லோக்கல்.

அனலி ஜனவரி 2ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. அடுத்த வாரமே ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆனாலும் என்னுடைய படமும் நிச்சயம் பொங்கல் சீசனிலும் தியேட்டர்களில் ஓடும்.

விஜய் உடன் இணைந்து நடிப்பேன். என் தயாரிப்பில் அவர் நிச்சயம் நடிப்பார். அவர் சினிமாவை விட்டு போய் விட்டார் என சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நிச்சயம் 2 வருடத்திற்குள் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார், அதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார்.

சிந்தியா லூர்டே விஜய் பற்றி இப்படி ஒரு கருத்தை சிந்தியதற்கு காரணம் கீழ் இருந்து (இதையும் சேர்த்து) மூன்றாவது பாராவில் இருக்குது.

புரியுதுல்ல.? நீங்க பாதாம் பிஸ்தா, முந்திரி பருப்பு, பூசணி பாசிப்பருப்புக் கூட்டு, வெள்ளரி விதை, தர்பீஸ் உள்ளே இருக்கும் வெள்ளைத் தோல் தானே?

— ராஜ திருமகன்

ANALI Trailer | Cynthia Lourde | Kabir Singh | Dinesh Deena | Shakthi Vasu | Abhishek
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share