பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று (செப்டம்பர் 26) டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடியாகும், மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியாகும். மீதமுள்ள நிதியான ரூ.33,593-ஐ வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியையும் மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்க வலியுறுத்தி நாளை காலை டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ளார்.
அதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டார்.
மூன்று மணி நேர பயணத்திற்கு பின்னர் டெல்லி சென்றடைந்த அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து புறப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று இன்று இரவு தங்கி ஓய்வெடுக்கும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“நடிகை பார்வதி நாயரின் அகம்பாவத்தை வேரறுக்கனும்”: சுபாஷ் சந்திர போஷ் பேட்டி!
அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் செந்தில்பாலாஜி மரியாதை!