வீ.ப.ஜெயசீலன்
இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான பொருட்செறிவு குறித்தோ, சொற்செட்டு குறித்தோ, உள்ளடக்கம், உத்தி மற்றும் இன்ன பிற இலக்கிய இன்கிரிடியண்டுகள் குறித்தோ யாதொரு அச்சமும் எனக்கில்லை.
ஆனால் இக்கட்டுரையை நிரல்பட எழுதவும், மயங்கொலிப் பிழைகள் அற்றும், ஒருமைப்பன்மை பிழைகள் நேராதவாரும் ஒற்றுப் பிழைகள் அண்டாதாவாரும் எழுதி முடிப்பதற்கான சிற்றச்சம் ‘வாய்ஸ் டு டெக்ஸ்ட்’ டைப் செய்யும் இக்குரலில் நிலவுவது வாசிப்பவர்களுக்குத் தெரியாது. காரணம் மேற்சொன்ன பிழைகளெல்லாம் பொறுத்தருளத் தக்கவையே என்று ஒரு முறை இவரிடம் நான் வாதம் செய்த போது ‘can you afford a small mistake in science or maths’ ? என வினவினார். நான் இல்லை என்றுரைக்க, ‘மொழிப் பாடமும் அது போல் Higher order thinking skills தேவைப்படும் துறையே, அதில் இருக்கும் இலக்கண விதிகள் முக்கியமானவை, இன்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பிய- நன்னூல் சூத்திரங்கள் திருக்குறள் உள்ளிட்ட உயர்தனி இலக்கியங்கள் அனைத்திலும் உள்ள விவாதத்தின் மையப் புள்ளியே அதன் இலக்கண வழுவமைதியை வைத்துத்தான் இருக்கும். மொழியில் ஏற்படும் எந்தவொரு பிழையும், பொருள் அறிதலில் சிக்கலை உண்டாக்கிவிடும். எனவே ஒற்றுப் பிழை ஒவ்வொன்றுக்கும் கால் மதிப்பெண் குறைப்பது சரியானதே என்று கறார் காட்டினார். அன்னாரைப் பற்றி எழுதப்படும் கட்டுரையில், அவரிடம் பழுதறக் கற்ற மாணவன் என்ற முறையில் மேற்சொன்ன அச்சத்தை நியாயமார்கள் ஏற்பார்கள் என்றே நம்புகிறேன்.
‘உள்ளத்தில் அள்ளி வைத்த தேனை உப்பென்று துப்பும் ஊமை வண்டுகள்’ என்று நா. காமராசன் கண்கள் பற்றி எழுதிய கவிதையைக் கல்லூரியில் வாசித்திருந்தாலும், அதில் இருக்கும் இலக்கிய நேர்த்தி, இலக்கண உத்தி, தேர்வில் எப்படி எழுத வேண்டும் என்ற புத்தி, எது மதிப்பெண்களை வெட்டும் கத்தி, கூரிய மொழிநடை எனும் சுத்தி ஆகிய அனைத்தையும் இணைத்து, மேற்சொன்ன கவிதை வரிகளை நேர்த்தியாக வினா-விடை கட்டமைப்புக்குள் செதுக்கி வைப்பது எப்படி என்று ஒரு வகுப்பில் அவர் விவரித்த போது திகைத்துப் போனேன்.
வேளாண் அறிவியல் பயின்ற நான் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் பொது நிர்வாகத்தையும், தமிழ் இலக்கியத்தையும், இரு விருப்பப் பாடமாக எடுக்கத் துணிந்து, சங்கர சரவணன் சார் தமிழ் வகுப்பில் அமர்ந்தது வாழ்வில் கிடைத்த நல்வாய்ப்புகளில் ஒன்று.

கால்நடை மருத்துவ மாணவர் இப்படி ஆழமாகத் தமிழைப் பேசுவது எனக்கு வியப்பாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. அதே வியப்பு இத்தனை ஆண்டுகள் கழித்தும் இருப்பதற்குக் காரணம் அறிவுத்தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி, தன் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கித் தான் பெற்ற நூலறிவையும் கூரறிவையும் தமிழ்ச் சமூகத்திற்குத் தவம் போல் வழங்கும் அவர் உள்ளக் கிடக்கையே ஆகும். இந்தக் கட்டுரைக்கான தலைப்பை வள்ளுவரிடம் இரவல் பெற்று வைத்ததற்குக் காரணமும் அதுவே.
இந்தக் கட்டுரையில் இரண்டு நோக்கங்களை மையப்படுத்துகிறேன் . ஒன்று, கடந்த 15 ஆண்டுகளாக அவரோடு தொடர்ந்து பயணிக்கும் நான், அவரிடம் பெற்ற அனுபவங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது. இன்னொன்று, இக்கட்டுரையின் தலைப்பைப் போன்று அவர் தொடர்ச்சியாகத் தன் தேடலை, அறிவை, உழைப்பை இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்வது எப்படி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பதிவு செய்வதன் மூலம் இளையோர்களும் அறிவுத்தளத்தில் இயங்கக்கூடிய அனைவரும் ஊக்கம் பெற ஆற்றுப்படுத்துவது.
கல்லூரி பருவத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன். அப்போது “கையளவு களஞ்சியம்” என்ற நூலின் வழிதான் சங்கர சரவணன் சார் அறிமுகம் ஆனார். நான் அதில் ஒரு தகவல் பிழையைக் கண்டறிந்து, அவருக்குத் தொலைபேசியில் தெரிவித்தேன். அதைக் கேட்ட அவர், “அடுத்த பதிப்பில் திருத்தப்படும்” என்று கூறியதோடு, “பிழை கண்டுபிடித்ததற்கு பாராட்டி விட்டு, அதே பதிப்பில் மேலும் மூன்று பிழைகள் உள்ளன… அவற்றையும் கண்டுபிடித்து விட்டு, சென்னை வரும்போது சந்திக்கச் சொன்னார். அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன்.
சென்னைக்கு வந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தமிழ் விருப்பப் பாடத்திற்காகச் சங்கர சரவணன் சார் வகுப்பில் சேர்ந்தேன். அவருடைய தொடர்ச்சியான வகுப்புகள் உற்சாகமாகவும் தமிழை எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டும் என்ற உந்துதலையும் தந்தன. மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. அதில் “சிதைவிடத்து ஒல்கார்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நான் பேசினேன். பாடத்திட்டத்தில் உள்ள – ஆனால் வகுப்பில் இன்னும் நடத்தப்படாத அந்தத் திருக்குறளை எடுத்துப் பேசிய என்னை அவர் சற்றே நிமிர்ந்து பார்த்தார். அதிலிருந்து என்னை வகுப்பில் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். என் தமிழார்வத்தை அவரிடத்தில் வெளிப்படுத்தத் தொடங்கினேன்.
ஆசிரிய லட்சணங்கள் நிரம்ப பொருந்தியவர் என்பதை இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒரே பாடக் குறிப்புகளை வைத்து கூறியது கூறலைத் தவிர்ப்பார். பாடத் தலைப்பை விட்டு விலகாமல் பல்வேறு புதிய தகவல்களை விரிவாக எடுத்துச் சொல்வார். அவருடைய வகுப்பைப் பின்தொடர்ந்து குறிப்புகள் எடுப்பது மிகக் கடினம். அவ்வளவு திடகாத்திரமாக இருக்கும். ஒரு வகுப்பைக் கூடத் தவற விடாமல் செல்லத்தக்க வகையில் சுவைபட இலக்கண இலக்கியங்களை விவரிக்கும் ஆற்றல் மிக்கவர். தமிழ் பேச்சாளர்கள் பலர்,ஒரே பாயிண்டை வைத்து ஒரு மணி நேரம் சவ்விழுக்கும் சூழலில், இவர் ஒரு நிமிடத்தில் 10 தகவல்களைச் சொல்வது ஆசிரியலட்சணம் மட்டுமல்ல, மாணவர்களும் இதுபோல் ஊன்றிப் படிக்க வேண்டும் என்ற பேரார்வத்தை ஏற்படுத்தும் அறிவுத் தொடர்ச்சியுமாகும்.
2012குரூப்–1, 2012, 2013 இரண்டு ஆண்டுகளிலும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகளை நான் வெற்றிகரமாக எழுதியதில் சாரின் பங்கு மிக முக்கியமானது. தொடர்ந்து தேர்வுத் தயாரிப்பிலும் மாதிரி விடைகளை எழுதச் சொல்லி அவற்றைத் திருத்தித் தருவதிலும் மிகுந்த ஈடுபாட்டோடு எனக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தி, ஆற்றுப்படுத்தினார்.
ஒருமுறை மாதிரித் தேர்வெழுதி இரண்டு ஆசிரியர்களிடம் காட்டினேன். ஒருவருக்கு என் கவிதை நடை பிடிக்காமல், “இப்படி எழுதக் கூடாது” என்று கூறித் தாளைத் திருத்தவே இல்லை. அதே தேர்வுத் தாளைச் சங்கர் சரவணன் சாரிடம் காட்டியபோது, அவர் அதை மிகவும் பாராட்டினார். ஒரு விடைக்கு அருகில் “கவிதை நடை அருமை. கருத்துக்களில் மட்டும் ஏன் வறுமை?” என்று குறிப்பெழுதினார். என்னை அழைத்து இது போன்ற மொழி நடை எல்லோருக்கும் எழுத வராது, உனக்குத் தனித்துவமாக இருக்கிறது. ஆனால் இந்த மொழி நடையை மட்டுமே நம்பித் தேர்வை எதிர் கொள்ள முடியாது. விரிவான வாசிப்புடன், ஆழ்ந்த கருத்துக்களை, நல்ல விடைக் கட்டமைப்புடன் உன் நடையில் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார். அதையே சிரம் மேற்கொண்டு செய்து முடித்தேன்.
2012 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று எனக்கு இந்திய வருவாய்ப் பணி கிடைத்தது. மீண்டும் அதற்கு அடுத்த 2013ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பெறுவதற்காக இன்னும் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒவ்வொரு பாடப்பகுதிக்கும் நுணுக்கமாக வழிகாட்டினார். ஒவ்வொரு விடையிலும் இன்னும் அரை மதிப்பெண் கூடுதலாக பெறுவதற்கு அவர் எழுதிதந்த குறிப்புகள் எனக்கு பெரிதும் உதவின. இன்னும் அந்த அழகிய தமிழ்க் கற்றல் நாட்கள் என் நினைவுகளில் அப்படியே ஒட்டிக்கொண்டுள்ளன.
நான் யுபிஎஸ்சி தேர்வைத் தமிழ் வழியில் எழுதத் தீர்மானித்தபோது, பொது அறிவு/அறிவியல் வினாக்களுக்கான மாதிரி விடைகளையும் எழுதி சாருக்கே அனுப்புவேன். அப்பொழுது நேரடி வகுப்புகள் முடிந்த பிறகு அலைபேசியிலே கேள்விகளைச் சொல்வார். அதற்கேற்ற பதில்களை எழுதி அனுப்புவேன். படித்துவிட்டு அரைமணி, ஒரு மணி நேரம் ஆலோசனைகளை வழங்குவார். என் விடைத்தாளில் நான் எழுதிய பதிலை விட அவர் எழுதும் குறிப்புகள் அதிகமாக இருக்கும். அந்த அளவு மெனக்கெட்டு வழிகாட்டியவர்.
ஒருமுறை அவர் எனக்குச் சொன்ன உத்தி இது. “விடையின் முதல் வரி, முதல் வார்த்தையிலேயே தாக்கம் இருக்க வேண்டும்; அப்போதுதான் திருத்துபவர் சற்றே கூர்ந்து கவனிப்பார். ஆனால் அப்படி எழுதும் போது கவனம் தேவை.” இந்த ஆலோசனையைப் பிடித்துக் கொண்டேன். “ஜெயகாந்தனின் சிறுகதைகள் சமூகப் பிரச்சினைகளை எப்படிப் பேசுகின்றன?” என்ற கேள்விக்குக் குருபீடம் கதைத்தொகுப்பிலுள்ள நிக்கி என்ற நாய் பற்றிய கதையில், “ச்சீ, அது பொட்டடா” என்று தெருவில் கேட்பாரற்று கிடக்கும் பெண் நாயை ஒருவர் எடுக்காமலேயே விட்டுச் செல்லும் வசனம் வரும். அந்த வசனத்தை எடுத்து என் விடையின் முதல் வரியாக, “ச்சீ, அது பொட்டடா” என ஆணாதிக்கச் சமூகத்தின் கன்னத்தில் அறையும் கூர்மையான வசனங்களுக்குச் சொந்தக்காரர் ஜெயகாந்தன்.”
என்று எழுதினேன். அதை சார் மிகவும் பாராட்டினார். இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஊக்குவித்தார். அதே கேள்வி தேர்விலும் வந்தது. தேர்வுக் கூடத்தில் எழுதிக் கொண்டிருந்த போதே அவர் கற்றுத்தந்த வழிமுறைகள் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை நன்றியோடு உணர்ந்திருக்கிறேன்.
நேர்முகத் தேர்விற்கும் அவர் தொடர்ந்து வழிகாட்டினார். போனில் நீண்ட நேரம் கேள்விகளைக் கேட்பதும் அதற்கான பதில்களைக் கேட்டு, அதைச் சரி செய்வதுமென, அவர் காட்டிய முனைப்பு எப்போதும் நன்றிக்குரியது.
இப்படிப் பல உத்திகளை அவர் கற்றுத் தந்தார். அவரிடம் இருக்கும் அறிவு, அனுபவம், மொழியாற்றல், அதற்கும் மேலாக மாணவர்கள் மீதான கரிசனையும் எதிர்பார்ப்பில்லாத அன்பும் என சாரைப் பற்றி எப்போது நினைத்தாலும் வியப்பாகவே இருக்கிறது.
மனிதர்கள் பலவிதம். சிலர் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் பொறுமை குறைவு; சிலர் பொறுமைசாலிகள். ஆனால் சோம்பல் அவர்களை ஆட்கொள்கிறது. சிலர் பெரிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பழைய அறிவுக் கட்டமைப்பில் தங்கிவிடுகிறார்கள். சிலர் புதிய சிந்தனைகளை கொண்டிருக்கிறார்கள் ஆனால் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில்லை, இப்படியான வகைப்பாட்டில், எல்லா நற்குணங்களும் நிரம்பிய ஒரு அறிவாளர்தான் சங்கர் சரவணன் சார். படித்துப் படித்து உழைத்து உழைத்து சுடச்சுட ஒளிரும் பொன் போல் தொடர்ந்து ஒளிரும் அறிவுச்சுடர் அவர்.
ஒருமுறை, நீங்கள் எனக்குக் கிடைத்த சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்
என்று நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர் சற்றுச் சிரித்தபடி
“நல்ல ஆசிரியர்கள் நிறையக் கிடைப்பார்கள். ஆனால் நல்ல மாணவர்கள் கிடைப்பது மிகவும் அரிது. நல்ல மாணவர்கள் மூலம்தான் ஆசிரியர்கள் வெளிப்படுவார்கள்”. எனக்கு கிடைத்த அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவன் நீ என்றார்.
அந்த வார்த்தைகள் என்னைச் சற்று நடுக்கமடையச் செய்தன.
நான் உண்மையில் அப்படிப்பட்ட மாணவனாக இருக்கிறேனா என்று தெரியாது. ஆனால் அவர் சொன்னது போல் ஒரு நல்ல மாணவனாக இருப்பதற்குத் தேவையான தகுதிகளைப் பெறுவதற்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே புரிந்துகொண்டேன்.
இன்றுவரை தொடர்ச்சியாகப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் மிக முக்கிய வழிகாட்டி அவர் தான். எனக்குப் பிறகு என் உடன் பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன் சாரிடம் பயின்றான். மென்பொருள் துறையில் பணிக்கு சேர விரும்பியவன் போட்டி தேர்வு எழுதலாம் என வந்து சாரிடம் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை பெற்று இந்திய வனப்பணிக்கும் (IFS) குரூப் ஒன் தேர்வில் துணை ஆட்சியராகவும் வெற்றி பெற்றான். அதனால் என் பெற்றோர்களும் சாரின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர்கள்.
மனிதர்களுக்கு இயற்கையோ பிறப்போ பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. செல்வாக்கான உறவுகளால் கிடைக்கும் வாய்ப்புகள், செல்வமிக்க குடும்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல இருக்கலாம். ஆனால் கல்வியை மட்டுமே நம்பி உயரப் பறக்கத் துடிக்கும் எளிய பின்புலமுள்ள முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மட்டும்தான் அந்தச் சமூக மூலதனம் (social capital) எளிதில் கிடைக்கும். அது எனக்கு சங்கர சரவணன் போன்ற ஆசிரியர்கள் மூலம் கிடைத்ததை நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் பயிற்சிக்கு முசெளரி செல்லும் முன் விடாப்பிடியாக அதிகாலை 4 மணிக்கு அவர் இல்லம் சென்று ஆசி பெற்றே பயிற்சிக்கு சென்றேன். தமிழ்நாடு கேடர் கிடைத்ததை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர் சிரித்தபடி, “தம்பி, அடுத்து 75 ஆண்டுகளுக்கு நீ செய்வதற்கான தமிழ்ப்பணிகள் நிறைய இருக்கின்றன,” என்று கூறினார். அவரது அந்த வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமாகவும் ஊக்கமாகவும் எப்போதும் இருக்கிறது.
அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து எனக்கு வழிகாட்டி வருகிறார். கடந்த பத்து
ஆண்டுகளாகப் ஒவ்வொரு பணியிடத்திலும், ஒவ்வொரு பொறுப்பிலும் தமிழ் மொழி, பண்பாடு ஆகிய தளங்களில் அதிகார வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான நிரந்தர ஆலோசகராகவும் அறிவுரையளிப்பவராகவும் அவர் இருப்பது எனக்குப் பெரும் பாக்கியம்.
சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ, தொல்காப்பிய நூற்பாக்களையோ படிக்கும் போது ஏற்படும் ஐயங்களுக்குத் தெளிவு காண அழைக்கும் முதல் அழைப்பு அவருக்குத்தான். திருக்குறள் மீது பற்று கொள்வதற்கும் அதைத் தொடர்ந்து வாசித்துப் புதுப்புது பொருள் காணுவதற்கும் ஊக்கமாகத் திகழ்பவர் சங்கர சரவணன் சார் தான். நான் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, தமிழ்நாட்டின் தமிழறிவு மிக்க மாணவர்களை எல்லாம் அழைத்து இரண்டு முறை திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தியதற்கு உறுதுணையாக இருந்தார்.
குறள் சார்ந்தும் நெறிசார்ந்தும் செயல்படுவதற்கு அவ்வப்போது வழிகாட்டியும், பணியிலோ எழுத்திலோ பேச்சிலோ செயல்பாடுகளிலோ சுணக்கம் இருந்தால் எடுத்துரைக்கவும் சமயங்களில் இடித்துரைக்கவும், நான் துணைக் கொண்ட பெரியாரவர்.
சங்கர சரவணன் சாரின் 50ஆவது பிறந்தநாளுக்கு அவரை வணங்கி வாழ்த்துச் சொல்லி இந்தப் பிறந்தநாள் செய்தியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்குத் தன் செயல்பாடுகளில் மூலம் இதைச் சொல்கிறார் என்று நம்புகிறேன்.
சிறந்த ஆசிரியர்களும் சிறந்த வழிகாட்டிகளும் ஒரு சமூகத்திற்கு முக்கியமானவர்கள். அவர்கள்தான், அரிதிற் காணக் கிடைக்கும் கற்பனை உலகை எளிய மாணவர்களுக்கும் தருபவர்கள். ஆசிரியர்களுக்கும் அறிவுத்தளத்தில் செயல்படுபவர்களுக்கும் சங்கர சரவணன் சார் ஓர் அளவுகோல் என்பேன்.
அந்த அளவுகோல் இன்னும் அரை நூற்றாண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு ஒளியைத் தரட்டும் என்று இறைவனையும் இயற்கையையும் வேண்டுகிறேன் என்று தேவையான அளவு இறை நம்பிக்கையும், இயற்கை நம்பிக்கையும் கொண்ட என்னால் எழுதி முடிக்க முடியும். ஆனால் இதிலும் ஒரு தெளிவோடு வாழ்த்துரைப்பதையே அவர் விரும்புவார் என நினைக்கின்றேன். சங்கர சரவணன் சார் ஏகன் அனேகன் அருளால் நூறாண்டுகள் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன். இது என்ன தெளிவுரை என்று ஐயப்படுபவர்கள் அடுத்து வாசிக்கவும்.
நான் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒரு பின்மாலைப் பொழுதில் இரண்டு பெரியவர்கள் ஒரு மனுவோடு என்னை சந்திக்க வந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அமைதி நிலவிய என் அறையில் தெளிவாகச் சொன்னார்கள், சிலுகாசிக்கு அருகில் ஒரு கிராமம் என்று. அவர்கள் சரியாக உச்சரிக்கவில்லையே என்று நினைத்து சிவகாசி தானே என்று கேட்டேன். இல்லை, சிலுகாசி என்று இன்னும் தெளிவாகச் சொன்னார்கள். சிலுகாசி என்று அவர்கள் தவறாகச் சொன்னது எனக்கு சரியாக கேட்டது. நான் மீண்டும் கேட்டபோது அவர்கள் தெளிவாகவே சொல்லி விட்டார்கள். ஐயா, நீங்கள் சொல்லும் பெயரை நாங்கள் குறிப்பிடுவதில்லை, நாங்கள் வீர வைணவர்கள் என்றவுடன் நான் அதிர்ச்சி அடையவில்லை. அவர்களை பரிசோதிப்பதற்காக ‘சிவ’ என்ற வார்த்தை வரும் பெயர்களை குறித்து கேட்ட போதும் மிக கவனமாக அதை தவிர்த்து விட்டார்கள் அல்லது சிலு என்று மாற்றி விட்டார்கள். அப்போதுதான் வீர சைவர் ஒருவர் குறித்து என் நினைவுக்கு வந்தது.
2019 ஆம் ஆண்டு தமிழ் கூறும் நல்லுலகமே அத்திவரதரைப் பார்த்தால் தான் அவ்வுலகம் இவ்வுலகம் இரண்டிலும் வாழ்வதன் பொருள் என நினைத்து அவரை சேவிக்க துடித்துக் கொண்டிருந்த காலத்தில், நான் இவருக்கு போன் செய்து ‘சார் அத்தி வரதரை பார்க்கப் போகிறேன் நீங்கள் வருகிறீர்களா’ இல்லை உங்களுக்கு பாஸ் அனுப்பட்டுமா ? என்று கேட்டேன். தம்பி என்னை பார்த்து இப்படிக் கேட்கலாமா? சிவனையே வணங்கும் வீரசைவனாகிய நான் அங்கு வருதல் தகுமோ? எனத் திருப்பி கேட்டது ஆச்சரியமாக இருந்தது. சார்…சமயச்சார்பின்மை… இப்படி நிறைய பேசுவீர்களே! என்று நான் வம்புக்கு இழுத்தேன். உடனே அவர் சமய நம்பிக்கைக்கும், சமய சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடு குறித்து தர்க்க ரீதியாக விளக்கினார். சமய நம்பிக்கை உள்ள எல்லோரும் சமயச்சார்பின்மைக்கு எதிரி இல்லை என்றதோடு மட்டுமல்ல.. தமிழ் பண்பாட்டில் சைவ – வைணவ இருமை ( Dichotomy ) ‘காரைக்கால் அம்மையார் காலம் தொடங்கி கமலஹாசன் காலம் வரை’ எவ்வாறு தொடர்கிறது என்பதை சுவையான இலக்கிய, கலைத்துறைச் சான்றுகள் தந்து ஒருமணி நேரம் இலவச வகுப்பெடுத்தார்.
எனவே மாவட்ட ஆட்சியராக நான் சந்தித்த வீர வைணவர்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் அதற்கு முன்பாக நான் வீர சைவர் ஒருத்தரை சந்தித்து, விளக்கமும் பெற்று விட்டேன் அல்லவா?
அத்தகைய வீரசைவருக்கு, ஆகமமாகி நிற்கும் அந்த ஏகன் அனேகன், உம்பர்கட்கு அரசன், ஒழிவற நிறைந்த யோகன், குடி முழுதாண்ட பிஞ்ஞகன், அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியன், அன்பினில் விளைந்த ஆர் அமுதன், நீடாயுளும், நிறை செல்வமும் ஓங்கு புகழும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நிறைவாக அருள வேண்டி, குணமிக்க என் பொறிகளால் எண்குணத்தான் தாளை வணங்கி நிறைவு செய்கிறேன் வாழ்க ! வாழ்க !
இனிய பொன்விழா ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் சார் !
