நெல்லை : நயினாரின் தேநீர் விருந்து ரத்து… நேராக மாநாட்டுக்கு சென்ற அமித் ஷா

Published On:

| By christopher

amitshah entered nellai booth comittee meeting

நெல்லையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல், நேராக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறச் சில மாதங்கள் உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில் ஆளும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மண்டலம் வாரியாக வாக்குச்சாவடிக்குழு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) மாலை பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி கொச்சியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கிருந்து 3.15 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிக்காப்டர் தளத்தை வந்தடைந்தார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து நேராக நெல்லை – தஞ்சைநல்லூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாஜக பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வாகனத்தில் புறப்பட்டார் அமித் ஷா.

இந்த மாநாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக நயினார் நாகேந்திரன் பாளை பெருமாள்புரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் அமித் ஷாவுக்கு பல வகையான உணவு பண்டங்களுடன் தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கிய அமித் ஷா அங்கிருந்து புறப்பட்டு நேராக தச்சநல்லூரில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டு திடலுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share