சிறப்புக் கட்டுரை: அமித் ஷாவின் வரலாறு எழுது நெறி!

Published On:

| By Balaji

எஸ்.வி.ராஜதுரை

இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரும் பாஜகவின் தலைவருமான அமித் ஷா கடந்த 17.10.2019 அன்று வாரணாசியிலுள்ள ‘பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்’தில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்கந்தகுப்தா விக்ரமாதித்ய மன்னனைப் பற்றிய இரு நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், இந்தியாவின் வரலாறு ஒரு இந்தியனின் நோக்குநிலையிலிருந்து புதிதாக எழுதப்பட வேண்டும் என்றும் இப்படிப்பட்ட வரலாற்றை எழுதுவதில் வி.டி.சாவர்க்கர் உதாரண மனிதராகத் திகழ்கிறார் என்றும் கூறினார். அந்தக் கருத்தரங்கின் தலைப்பு : ”குப்தவன்ஷக் வீர்: ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா”. ’குப்தவன்ஷக் வீர்’ என்பதன் பொருள், ’ குப்த வம்சத்தின் வீரமிக்க உறுப்பினர்’ என்பதாகும். ’வீர்’ என்பது, இந்துத்துவத்தின் பிதாமகனாகிய வி.டி.சாவர்க்கரின் பெயரின் முன்னொட்டாக சங் பரிவாரத்தால் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

புராணங்கள், இதிகாசங்கள் வரலாறு ஆகுமா?

ஆங்கிலேய, முஸ்லிம், இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இதுகாறும் இந்திய வரலாற்றைத் திரிபுபடுத்தியிருப்பதால், அவர்களை விமர்சிப்பதோடு மட்டும் நின்று கொள்ளாமல், இந்திய வரலாற்றை இந்திய மக்களிடையே ’பிரபல்யப்படுத்தும்’ வகையில் எழுத வேண்டும் என்று கூறிய அவர், மகாபாரதக் காலத்திற்குப் பிறகு இந்தியாவில் பொற்காலம் என்பது குப்த மன்னர்களின் ஆட்சியின்கீழ்தான் இருந்தது என்றும், “இந்தியா இழந்துபோன புகழ் இப்போது மோடியின் ஆட்சியின் கீழ் மீட்டெடுக்கப்பட்டு வருகிறது” என்றும் கூறினார். புராணங்களையும் கட்டுக்கதைகளையும் வரலாறாகவும் அறிவியலாகவும் முன்னிறுத்திவரும் சங் பரிவாரத்தைச் சேர்ந்த தலைவரொருவர் இப்படிப் பேசுவதில் வியப்பொன்றுமில்லை (விநாயகருக்கு மனித உடலும் யானைத் தலையும் இருப்பது, நினைவுக்கெட்டாத பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ இருந்தது என்பதற்கான ஆதாரம் என்று வாதிப்பவர்களல்லவா இவர்கள்!) வரலாறு எழுதும் அறிஞர்கள், எழுத்து வடிவத்திலுள்ள வரலாற்று ஆவணங்களை மட்டுமின்றி, தொல்லியல் சான்றுகள், புதைவடிவச் சான்றுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றுடன் இலக்கியச் சான்றுகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் ( அந்த இலக்கியச் சான்றுகள் அப்பட்டமான புராணக் கட்டுக்கதைகளாக மட்டும் இல்லாத பட்சத்தில்). ஆனால் புராணங்களையும் இதிகாசங்களையும் வரலாற்று நூல்கள் என்று அவர்களில் எவரும் கருதுவதில்லை.

குப்த வம்ச ஆட்சிக்காலத்தை அமித் ஷா மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களும்கூட ‘பொற்காலம்’ என்றே குறிப்பிட்டு வந்தன. ஆனால், ஆராய்ச்சித் திறன் மிக்க பல வரலாற்றாய்வாளர்கள் குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு கலைகள் ஊக்குவிக்கப்பட்டன, நுண்கலை மரபுகளும் உத்திகளும் உருவாக்கப்பட்டன, உயர் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன என்பதோடு, அவர்களது ஆட்சிக்காலத்தில்தான் மகாபாரதமும், இராமாயணமும் முறைப்படித் தொகுக்கப்பட்டன, புராணங்கள் எழுதப்பட்டன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், அரசர்கள்மீது பார்ப்பனர்கள் செலுத்திய செல்வாக்கும் சமுதாயத்தில் அவர்களுக்கிருந்த மேலாண்மையும் குப்தர் ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கப்பட்டன. மெளரிய வம்ச மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பெளத்தம் உயர்த்திப் பிடிக்கப்பட்ட போதிலும், பார்ப்பனர்களின் கருத்துநிலை ஆதிக்கம் சமுதாயத்தில் தொடர்ந்து நீடித்துவந்தது என்பதை இந்திய வரலாற்றறிஞர் டி.டி.கோஸம்பியும் அமெரிக்க வரலாற்றறிஞர் அய்ன்ஸ்லி எம்ப்ரீயும் எடுத்துக்காட்டியுள்ளனர். இருப்பினும் மெளரிய மன்னர்கள் பெளத்தத்தை ஆதரித்த காரணத்தால்தான் அமித் ஷாவால் அவர்களின் ஆட்சியைப் பொற்காலம் என்று கூற முடியவில்லை.

வரலாற்றில் கண்ணோட்டம்

அதேபோல, இந்தியாவில் –ஏன், ஹிந்தி பெல்ட் என்று சொல்லப்படும் பகுதிகளிலும்கூட- வரலாறு ஒரே மாதிரியாக இருக்கவில்லை, பல்வேறு நாகரிகங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஆட்சிகளின் கீழ் தோற்றுவிக்கப்பட்டன; குப்தர்கள் காலத்துக்கு முன்பே இந்தியாவில் நகர நாகரிங்கள் இருந்தன (சிந்து சமவெளி நாகரிகம், கீழடி நாகரிகம் போன்றவை) என்பதை மறுக்கின்ற முயற்சிதான் அமித் ஷாவின் பேச்சு. இத்தனைக்கும் அவர் ‘ பெனாரஸ்’ என்று ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்தான் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவரது கட்சியும்கூட ’பார்ட்டி’தான்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள் நீண்டகாலமாகவே இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட வரலாற்று நூல்களையே கற்பித்து வந்தன என்றும் அவை ‘முகலாய ஆட்சியை’ போற்றிப் புகழ்ந்தன என்றும், அவற்றை முற்றிலுமாக அகற்றிவிட்டு இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்கள் ஆட்சிகள் அனைத்துமே பிற்போக்கானவை என்று நிறுவுகின்ற, முஸ்லிம் படையெடுப்பாளர்களையும் ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போரிட்ட பிரித்விராஜ் செளஹான், ரானா பிரதாப் சிங் போன்றவர்களைப் புகழ்கின்ற வரலாற்று நூல்களை எழுத வேண்டும், பண்டைக்கால ஹிந்துக்களின் அறிவையும் விவேகத்தையும் போற்ற வேண்டும் என்றும் சங் பரிவாரம் நீண்டகாலமாகவே கூறிவருவதுடன், வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலேயே இப்படிப்பட்ட ‘வரலாற்று நூல்களை’ எழுதும் பணியைத் தொடங்கியிருந்தன. இன்று அத்தகைய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களிலும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன.

இதுதான் இந்திய நோக்கு நிலையா?

முஸ்லிம் மன்னர்களைப் பற்றிய எதிர்மறையான குறிப்புகளைத் தவிர வேறு ஏதும் வரலாற்று நூல்களில் இடம் பெறக்கூடாது என்ற சங் பரிவாரத்தின் கொள்கையின் நீட்சியாக, தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள பாஜக அரசாங்கம், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் பிறப்பித்த முதல் ஆணைகளிலொன்று திப்புவுக்கு அரசாங்க விழா எடுப்பதைத் தடை செய்யும் ஆணையாகும். அண்மையில் கர்நாடக பாஜக அமைச்சரொருவர் மைசூரு மன்னரின் (திப்பு சுல்தான்) பெயர் எங்கும் காணப்படக்கூடாது என்று தடை உத்தரவு போட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, இராஜஸ்தான் மாநிலத்தில் பத்தாம் வகுப்புப் பாடப்புத்தகமொன்றில், ஹால்டிகாட்டி என்னுமிடத்தில் ரானா பிரதாப்பின் படைகளுக்கும் அக்பரின் படைகளுக்கும் நடந்த போரில் ரானா வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதுதான் ‘ ஓர் இந்தியனின் நோக்கு நிலை’யிலிருந்து வரலாற்றை எழுதுவதாகும். ‘இந்தியன்’ என்ற திணைக்குள் இடதுசாரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடமில்லை!

மேற்சொன்ன கருத்தரங்கின் தொடக்கவுரையில் அமித் ஷா கூறினார்: வீர் சாவர்க்கர் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் 1857ஆம் ஆண்டுக் கிளர்ச்சி நமது வரலாற்றின் பகுதியாக இருந்திருக்காது என்றும், அதை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று எழுதியவர் அவர்தான் என்றும், அவர் அப்படி எழுதாமல் இருந்திருந்தால் நாம் இன்றும்கூட அதை சிப்பாய் கலகமென்றே வர்ணித்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் கண் கொண்டே பார்த்து வருவோம் என்றும் கூறினார். அமித் ஷாவின் இக்கூற்று உண்மையா, இல்லையா என்பதைப் பின்னர் காண்போம்.

அம்பேத்கர் சொல்லும் மூன்று இந்தியாக்கள்

வி.டி.சாவர்க்கரைப் போலவே மகாராஷ்டிர மண்ணில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் எழுதிய ’இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ என்ற (முழுமை பெறாத) நூலை – ( அம்பேத்கரும் இந்தியர்தான் என்பதால்) ‘ஓர் இந்தியனின் நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்ட வரலாற்று நூல்’ என்று சங் பரிவாரமும் அமித் ஷாவும் ஒப்புக் கொள்வார்களா? ‘நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே இந்தியத் துணைக் கண்டம் இந்து நாடாகவே, ‘ஹிந்து ராஷ்ட்ரா’வாகவே இருந்து வந்துள்ளது என்றும் முஸ்லிம்களின் படையெடுப்புக்குப் பின்னரே அதன் மாண்பும் புகழும் குலையத் தொடங்கின என்றும் கூறிவரும் சங் பரிவாரத்தின், இந்து தேசியவாதிகளின் கூற்றை மறுத்து இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு முன் மூன்று இந்தியாக்கள் இருந்ததாக அம்பேத்கர் மேற்குறிப்பிட்ட நூலில் வாதிடுகிறார்:

(1.) பார்ப்பனிய இந்தியா: இது வேதகால இந்தியா. ஆரிய சமுதாயக் காலம்; உண்மையில் இது நாகரிகமும் பண்பாடும் முதிர்ந்திராத காலம் . (2) பெளத்த இந்தியா: இது மகதப் பேரரசு, மெளரியப் பேரரசுக்கால இந்தியா பெளத்தப் புரட்சி உண்டான காலம், புதிய நாகரிகம் தோன்றி மானுட சமத்துவத்தை உயர்த்துப் பிடித்த காலகட்டம். (3) இந்து இந்தியா: பார்ப்பனியம் பெளத்த மதத்துக்கு எதிராக எதிர்ப்புரட்சி நடத்திய காலத்து இந்தியா புஷ்யமித்ர குப்தப் பேரரசன் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலம் இது. மனு சாத்திரங்களின் தோற்றம், சாதிய அமைப்பு தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட நிலை, பெண்களும் சூத்திரர்களும் அடிமைப் படுத்தப்பட்ட நிலை ஆகியவற்றுடன் இந்தக் காலகட்டத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

”இந்தியாவுக்கு முஸ்லிம்கள் மட்டும் படையெடுத்து வரவில்லை – இந்து இந்தியாவின் மீது முஸ்லிம்கள் படையெடுத்து வந்தது போல், பெளத்த இந்தியா மீது பார்ப்பனர்கள் படையெடுத்து வந்தனர்” என்றும் அவர் கூறுகிறார்.

மகாபாரதத்தின் காலம்

குப்த வம்ச அரசன் பாலாதித்யனின் ஆட்சிக் காலத்தில்தான் பகவத் கீதை தொகுக்கப்பட்டது என்று டி.டி.கோஸம்பியின் தந்தையும் பன்மொழி அறிஞருமான தர்மானந்த கோஸம்பி கூறியதை ஏற்றுக் கொள்ளும் அம்பேத்கர், ‘மகாபாரதம்’ எழுதப்பட்ட காலம் எது என்பதற்குத் திட்டவட்டமான விடை காண்பது இயலாது என்றாலும், தாம் நேரடியாகக் கற்றவை, பேராசிரியர்கள் ஹாப்கின்ஸ், தர்மானந்த கோஸம்பி ஆகியோரின் ஆராய்ச்சி நூல்களிலிருந்து கற்றவை ஆகியவற்றின் துணையோடு பின்வரும் கருத்தைக் கூற முடியும் என்கிறார்: மகாபாரதம் கி.பி.1220 வரை எழுதி முடிக்கப்படவில்லை; ”மகாபாரதத்தின் பெரும் பகுதியும் எழுதி முடிக்கப்பட்ட பிறகுதான் இராமாயணத்தின் பெரும் பகுதியும் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை”.

தர்மானந்த கோஸம்பியும் அம்பேக்தரும் கூறியவை “ ஒரு இந்தியனின் நோக்குநிலையிலிருந்து” எழுதப்பட்டவையா, இல்லையா?

இந்துக்கள் அனைவருக்குமான ‘புனித நூல்’ என்று சங் பரிவாரத்தினரால் தூக்கிப் பிடிக்கப்படும் ‘பகவத் கீதை’யில் ஒன்றுகொன்று துல்லியமாக வேறுபடும் நான்கு தனித்தனிப் பகுதிகள் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார் அம்பேத்கர். அர்ஜுனனுக்கு தன் ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் போர் புரிய விருப்பமின்மை இருந்ததையும், போர்புரியுமாறு அவனை கிருஷ்ணன் வற்புறுத்தியமையையும், அதற்கு இறுதியில் அர்ஜுனன் இசைந்ததையும் கூறும் வீரகாவியப் பாடலாகத்தான் ‘மூல கீதை’ இருந்தது என்றும், பின்னர் கிருஷ்ணனை ஈஸ்வரனாகச் சித்தரிக்கும் பகுதி, ’மூல கீதை’யில் செய்யப்பட்ட முதல் ஒட்டுவேலை அல்லது இடைச் செருகல் என்றும், ஜைமினியின் பூர்வ மீமாம்சைத் தத்துவத்தில் அடங்கியுள்ள எதிர்ப்புரட்சிக் கருத்துகளுக்குக் கவசமாக விளங்கிடும் வகையில் சாங்கிய , வேதாந்தத் தத்துவக் கருத்துகளை ‘மூல கீதை’யில் நுழைத்திருப்பது இரண்டாவது இடைச்செருகல் என்றும் கூறும் அம்பேத்கர், ‘நால்வர்ணக் கோட்பாட்டை வலுவாக ஆதரிப்பதன் மூலம் எதிர்ப்புரட்சி இன்றுவரை அழியாமலிருப்பதற்கு உத்தரவாதம் தருவதே கீதை என்று கூறுகிறார்.

ஆக, இதுவும் ‘ஓர் இந்தியனின் நோக்குநிலை’ யிலிருந்து எழுதப்பட்டதுதானா, இல்லையா?

அமித் ஷா கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், 1857ஆம் ஆண்டில் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டுக்காலம் பிரிட்டிஷ் இராணுவத்தையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும் மட்டுமின்றி, இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் எதிராக , பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திலிருந்த இந்திய சிப்பாய்கள் நடத்திய கிளர்ச்சியை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான கிளர்ச்சி, எழுச்சி என்று முதன் முதலில் கூறியவர்கள் இரு ஆங்கிலேயர்களும் இங்கிலாந்தில் அகதியாக வாழ்ந்து வந்த ஒரு ஜெர்மானியரும்தான் என்பதை அறிந்திருப்பார். அவர்கள் அதை ‘ இந்தியாவின் முதல் விடுதலைப் போர்’ என்று அழைக்கவில்லை என்பது உண்மைதான்.

1857-ம் மார்க்ஸும்

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இந்தக் கிளர்ச்சிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை மாஸ்கோவிலிருந்த பதிப்பகமொன்று (Progress Publishers) 1959இல் முதன் முதலாக வெளியிட்டபோது அத்தொகுப்புக்குத் தரப்பட்டிருந்த பெயர்தான் Marx Engels: First Indian War of Independence 1857-59 . எனினும், ‘சிப்பாய் கலகம்’ (Sepoy Mutiny) என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களும் ஆங்கில ஏடுகளும் அழைத்துவந்ததற்கு மாறாக ‘இந்தியக் கிளர்ச்சி’, இந்தியாவில் கிளர்ச்சி, ‘ ‘இந்திய எழுச்சி’ (Indian Revolt, Revolt in India, Indian Rebellion) என்றே அவர்கள் அழைத்தனர். அப்படி அழைத்தவர்களில் இன்னொருவர் இங்கிலாந்துத் தொழிலாளர் இயக்கத் தலைவர்களிலொருவராக இருந்தவரும் ‘பீப்பிள்ஸ் பேப்பர்’ என்ற ஏட்டின் ஆசிரியருமாக இருந்த எர்னஸ்ட் ஜோன்ஸ். அவரும் அவரது அந்த ஏட்டில் எழுதி வந்த கார்ல் மார்க்ஸும் நண்பர்கள், ஒரே வயதினர்.

‘பீப்பிள்ஸ் பேப்பரி’ல் 1853 மே மாதம் ஜோன்ஸ் அடுத்தடுத்து எழுதிய கட்டுரைகள், இந்தியாவில் நடக்கும் பிரிட்டிஷ் ஆட்சி, அந்த நாட்டு சுதேசி மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதற்கான சட்டரீதியான வடிவம் என்று சாடின. இந்தியாவைக் ‘கீழ்த்திசை அயர்லாந்து’ என்றும் பல பத்தாண்டுகளாக அங்கு நிகழ்ந்துவரும் ‘பிரிட்டிஷ் காட்டுமிராண்டித்தனம்’ அந்த நாட்டுக்கு முன்னேற்றத்தையல்ல, கொடிய துன்பத்தையே விளைவித்துள்ளது என்றும் அவர் எழுதினார். அதாவது கிழக்கு நாடுகளைப் பற்றிய ஏகாதிபத்தியச் சொல்லாடல்களில் அந்த நாடுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்பதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஏற்றிச் சொல்லும் ஜோன்ஸ், ஓரடி முன் சென்று இந்தியாவின் விடுதலையை ஆதரித்து எழுதினார். இந்தியாவின் சுதேசிப் போர்வீரர்கள் – சிப்பாய்கள் – பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார் 1853ஆம் ஆண்டில். இன்னொரு கட்டுரையில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் சுரண்டலை இந்திய மக்கள் மீது நடத்தப்படும் காலனிய ஒடுக்குமுறையுடன் இணைத்துப் பார்த்த அவர், இங்கிலாந்தில் வர்க்கப் போராட்டம் நடத்துவதற்கு இந்தியா சுதந்திரமடைவது முக்கியமானது என்று கூறினார்.

ஆங்கிலேய மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள், மானுடவியலாளர்கள், மேலை நாட்டு ஏடுகள் ஆகியவற்றிலிருந்தும் இந்தியா பற்றி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலிருந்தும், பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்களிலிருந்தும்தான் கார்ல் மார்க்ஸால் இந்தியா பற்றிய தகவல்களைத் திரட்ட முடிந்தது. இந்திய நிலவரங்களைப் பற்றி ’ ஓர் இந்திய நோக்குநிலை யிலிருந்து ஆங்கிலத்தில் எழுதக்கூடிய இந்தியர்கள் அன்று யாரும் இருக்கவில்லை. எனினும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ ஏட்டிற்கு அவர் எழுதிய கட்டுரைகள் பிரிட்டிஷார் நடத்திய சுரண்டலைப் பற்றியவை மட்டுமல்ல. அவரும் ஏங்கெல்ஸும் சிப்பாய்களின் எழுச்சி பற்றி 1857 செப்டம்பர் 1 முதல்,1858 செப்டம்பர் 18 வரை – ஏறத்தாழ ஓராண்டுக்காலம் – தொடர்ச்சியாக எழுதிவந்தனர்.

அந்த எழுச்சி பற்றி மார்க்ஸ் எழுதினார்: மனிதகுல வரலாற்றில் பழிதீர்த்தல் என்பதுபோன்ற ஏதோவொன்று இருக்கிறது; வரலாற்றுரீதியான பழிதீர்ப்பின் விதியொன்றின்படி, அந்தப் பழிதீர்ப்புக்கான கருவி துன்புறுத்தப்படுவோர்களால் அல்ல, துன்புறுத்துவோர்களால்தான் வார்த்தெடுக்கப்படுகிறது. பிரெஞ்சு முடிமன்னர் மீது விழுந்த முதல் அடி உழவர்களிடமிருந்து அல்ல, மேற்குடியினரிடமிருந்தே வந்தது. இந்தியக் கிளர்ச்சி இரயத்துகளிடமிருந்து, சித்திரவதை செய்யப்பட்டவர்களிடமிருந்து, பிரிட்டிஷாரால் அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டவர்களிடமிருந்து தொடங்கவில்லை. மாறாக பிரிட்டிஷாரில் ஆடை அணிவிக்கப்பட்டு, உணர்வூட்டப்பட்டு, தட்டிக் கொடுக்கப்பட்டு, கொழுக்கவைக்கப்பட்டு, செல்லம் கொடுக்கப்பட்ட சிப்பாய்களிடமிருந்தே தொடங்கியது.

“ இந்தியா நமக்கு ஒரு வலுவான கூட்டாளி” என்று ஏங்கெல்ஸுக்கு எழுதும் அளவுக்கு அந்த எழுச்சியை அவர் வரவேற்றார்.·

அந்தக் கிளர்ச்சியை ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’ என்று கூறியவர் வி.டி.சாவர்க்கர்தான். அந்தத் தலைப்பில் அவர் 1909இல் எழுதிய நூலைப் பற்றியும், அதில் அவர் எழுதியிருந்த கருத்துக்கள் சிலவற்றை நிராகரிக்கும் வகையில் அவர் எழுதி 14 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த ’ஹிந்துத்வா- ஹிந்து என்பவர் யார்?’ என்னும் நூலைப் பற்றியும் இன்னொரு கட்டுரையில் நாளை காண்போம்.

கட்டுரையாளர் குறிப்பு:

கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

நூல் குறிப்புகள்

1. ·இந்தியாவைப் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு, அக்கட்டுரைகளைப் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகியவற்றுக்கு:Karl Marx on India, From the New York Daily Tribune (including Articles by Frereck Engels) and extracts from Marx-Engels Correspondence 1853-1862), Tulika Books, New Delhi, 2006;

2. இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ், விடியல் பதிப்பகம், கோவை, 2003. இந்த நூலிலுள்ள தமிழாக்கத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மார்க்ஸும் எங்கெல்ஸும் 1857இல் நடந்த நிகழ்வுகளை ‘ இந்தியப் புரட்சி’ என்று எங்கும் சொல்லவில்லை. அதனை ‘கிளர்ச்சி’, ‘எழுச்சி’ என்றே கூறினர். ஆக, மேற்குறிப்பிடப்பட்ட தமிழாக்க நூலில் ‘புரட்சி’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களில், ‘கிளர்ச்சி’, அலது ‘எழுச்சி’ என்றே படிக்கவேண்டும்;

3. எஸ்.வி.ராஜதுரை (பதிப்பாசிரியர்), கார்ல் மார்க்ஸ் 200: ‘உயிர் எழுத்து’ கட்டுரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை, 2019.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share