நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதால் சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன், படப்பிடிப்பிலும், பொது நிகழ்வுகளிலும் நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் கண்டிப்பானவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
தனது வீட்டில் இருந்து ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையில் டிராபிக் ஜாம் ஆனதால் அவரது கார் மேற்கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
தன்னால் படப்பிடிப்பு தாமதமாவதை உணர்ந்த அமிதாப் பச்சன் தனது காரை விட்டு இறங்கி, பைக்கில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம் தன்னை படப்பிடிப்பு தளத்தில் இறக்கி விட முடியுமா? என்று கேட்டுள்ளார்.
பைக் ஓட்டி சம்மதிக்கவே அவரது பின்னால் அமர்ந்து படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,”பைக்கில் என்னை அழைத்துவந்து விட்டதற்காக நன்றி நண்பரே. உங்களை எனக்கு தெரியாது.
ஆனால் நீங்கள் என்னை பணிபுரியும் இடத்திற்கு சீக்கிரமாகவும் போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்றியும் அழைத்துச் சென்றீர்கள்.
தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மேலும் ரிபு தாஸ்குப்தாவின் இயக்கத்தில் ‘செக்ஷன் 84’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.
மு.வா.ஜெகதீஸ் குமார்









