மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வந்தார். இந்தநிலையில், கடந்த மாதம் தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். மேலும், தொடர்ந்து இந்த கோரிக்கையை ஆங்கில ஊடக பேட்டிகளிலும் அமித்ஷா வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில், மருத்துவப் படிப்பை தமிழில் படிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஏப்ரல் 18) தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இன்னும் கூடுதலான புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
இதுபற்றிய செய்தியை வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்க இருக்கிறோம். இதில் சில சட்ட சிக்கல்களும் உள்ளது. இவற்றையெல்லாம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தில் கூடுதல் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன்,
“206 வகையான ஜெனரிக் மருந்துகள் முதல்வர் மருந்தகத்தில் உள்ளன. இந்த மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடத்தப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் TNMSC மூலம் மருந்துகள் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது.
206 வகையான ஜெனரிக் மருந்துகளுக்கு மேல் வேறு ஏதேனும் மருந்துகள் வேண்டுமென்றாலும், கடை நடத்துகிறவர்கள் வாங்கி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மற்ற மருந்தகங்களை ஒப்பிடும் போது முதல்வர் மருந்தகத்தில் 75 சதவிகிதம் விலை குறைவாக உள்ளது. கூட்டுறவுத்துறை கோரிக்கை வைத்தால், கூடுதல் மருந்துகளை மருத்துவத்துறையின் TNMSC மூலம் கொள்முதல் செய்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார். Amit Shah medical syllabus tamil