திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” நடைபயண துவக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து , இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமித்ஷா பேசும்போது, “உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியாததை எண்ணி வருத்தப்படுகிறேன். ராமேஸ்வர பூமியானது இந்து மதத்தின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. என் மண் என் மக்கள் நடைபயணம் அரசியல் நடைபயணம் அல்ல. பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நடைபயணமாகும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கான நடைபயணமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் சாதனைகளை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஏழைகள் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வர இந்த நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார்.
தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் மோடி கொண்டு சென்றுள்ளார். மகாகவி பாரதியார் பிறந்தநாளான டிசம்பர் 11-ஆம் தேதியை இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவித்துள்ளார். காசி, சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமங்களின் மூலம் தமிழின் பெருமையை இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் பரப்பினார்.
யு.பி.ஏ அரசாங்கம் பத்து ஆண்டுகால ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ், திமுக கட்சிகள் வாக்கு சேகரிக்கும் போது, 2ஜி ஊழல் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். காஷ்மீர் சிறப்பு பிரிவு 370-சட்டத்திருத்தத்தை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
யு.பி.ஏ அரசாங்கம் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர். எதிர்க்கட்சிகள் நாட்டை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சோனியா காந்திக்கு ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதியையும் லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வியையும் மம்தாவுக்கு அவரது மருமகனையும் உத்தவ் தாக்ரேவுக்கு அவரது மகனையும் முதல்வராக்க ஆசை.
நரேந்திர மோடி மட்டுமே இந்தியாவிற்கு நலத்திட்டங்களை வழங்கும் ஆட்சியை நடத்தி வருகிறார். திமுக அரசு உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது.
ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வைத்திருப்பதற்கு வெட்கப்பட வேண்டும். ஸ்டாலின் அவரது ராஜினாமாவை ஏற்கமாட்டார். ஏனென்றால் செந்தில் பாலாஜி அனைத்து ரகசியத்தையும் சொல்லி ஸ்டாலினை சிக்க வைத்துவிடுவார்.
அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டால் உங்களுடைய ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் செய்த பல கோடி ரூபாய் ஊழல் தமிழக மக்களின் முன்பாக வந்திருக்கிறது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது. ஏழை மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு. 10 ஆண்டுகள் யு.பி.ஏ கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு நீங்கள் எத்தனை கோடி நிதி ஒதுக்கினீர்கள்.
என்.டி.ஏ கூட்டணியில் 45 ஆயிரம் கோடி சாலை மேம்பாட்டு திட்டத்திற்கும் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 73 ஆயிரம் கோடி, தமிழக ரயில்வேக்கு 34 ஆயிரம் கோடி, இரண்டு வந்தே பாரத் ரயில்கள், ஜல் ஜீவன் திட்டத்தில் 86 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. 9 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளதை நான் குறிப்பிட்டுள்ளேன். யுபிஏ அரசாங்கத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“சிறையில் இருப்பவர் அமைச்சரா? வெட்ககேடானது ஸ்டாலின்” : அமித் ஷா பேச்சு!
Comments are closed.