ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற அமித் ஷா இன்று (பிப்ரவரி 27) காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். Amit Shah leaves for Delhi from isha
இரண்டு நாள் பயணமாக கடந்த 25ஆம் தேதி இரவு கோவை விமான நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அன்று இரவு அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அவர், நேற்று காலையில் கோவை பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் நேற்று மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவாரத்திரி விழாவில் பங்கேற்க சென்றார். அங்கு அவருக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு சிறப்பு வரவேற்பு அளித்தார்.
மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் நள்ளிரவு 1 மணிவரை பங்கேற்றார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ஈஷா மையத்தில் இருந்து ஹெலிபேட் பகுதிக்கு அமித் ஷாவை தனது கருப்பு நிற டிபெண்டர் காரில் ஏற்றிக்கொண்டு தானே ஓட்டிச் சென்று வழியனுப்பி வைத்தார் சத்குரு.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்ட அமித் ஷா, அங்கிருந்து அடுத்த சில நிமிடங்களில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.