மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பதாகைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. Amit Shah in Madurai
மதுரையில் திமுக பொதுக்குழு அண்மையில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் பங்கேற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் மதுரையில் பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக அமித்ஷா, நேற்று இரவு மதுரை வருகை தந்தார். அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் அதிமுக மூத்த தலைவர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

இதனிடையே மதுரை மாநகரின் பல இடங்களில் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல்வர் ஸ்டாலின் பொதுக் கூட்டங்களில் பேசுகிற, “எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு Out of Control; டெல்லி படையெடுப்புக்கு எப்போதும் தமிழ்நாடு வீழாது” என்ற வாசகங்களுடன் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல சென்னையிலும் பல இடங்களில் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.