புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தனது பேச்சை தவறாக மொழிபெயர்த்தவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுகடுத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இரு நாள்சுற்றுப்பயணமாக பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகைத் தந்துள்ளார்.
நேற்றிரவு திருச்சி வந்த அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வந்தார்.
இதையடுத்து கார் மூலம் காரைக்கால் நகராட்சித் திடலுக்கு 12 மணியளவில் வந்த அமித்ஷா, அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
புதுச்சேரிக்கு பாஜக என்ன செய்திருக்கிறது என சொல்ல வந்திருக்கிறேன் என்று கூறிய அமித்ஷா உலகின் தொன்மையான மொழியான தமிழில் என்னால் பேசிய முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இந்தியில் பேசினார்.
அப்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஏற்படுத்திய குழிகளை தற்போதைய முதல்வர் ரங்கசாமி மூடி வருகிறார் என்று கூறினார்.
ஆனால் அமித்ஷாவின் இந்தி பேச்சை மொழிபெயர்த்த நபர், புதுச்சேரிக்கு நாராயணசாமி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
இதை கவனித்த அமித்ஷா, ‘ஏய்…. தப்பா சொல்றீங்க” என்று கோபமாக பேசிய நிலையில், மொழிபெயர்ப்பாளர், ‘ரங்கசாமி சிறப்பான ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார்’ என்று கூறினார்.
இதனால் மீண்டும் கடுப்பான அமித்ஷா, நாராயணசாமி தோண்டிய குழிகளை ரங்கசாமி மூடிக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொன்னேன்… அதைச் சரியா விளக்கிச் சொல்லுங்க என்று டென்ஷனாக கூறினார்.
அமித்ஷாவின் கண்டிப்புக்கு பிறகு அந்த மொழிப்பெயர்ப்பாளர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிக மோசமான ஆட்சியைத் தந்திருக்கிறார்” என்று மாற்றிப் பேசினார்.
இதையடுத்து அமித்ஷா தொடர்ந்து எதிர்க்கட்சியை விமர்சித்து பேசி, பாஜக புதுச்சேரிக்கு என்ன செய்தது என விளக்கமாக கூறினார்.
