மருத்துவம், பொறியியல் படிப்பு… ஸ்டாலினுக்கு அமித்ஷா கோரிக்கை!

Published On:

| By Selvam

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை விரைவில் தமிழில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மார்ச் 7) வலியுறுத்தியுள்ளார். amit shah attacks stalin

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 52-ஆவது உதயநாள் விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மார்ச் 6) அரக்கோணம் வந்தடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,

“2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும், வளர்ந்த நாடாகவும் மாற்றும் பிரதமர் மோடியின் உறுதியை அடைவதில் தொழில் பாதுகாப்பு படையின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது.

நாட்டின் தொழில்துறை, வணிகம், ஆராய்ச்சி என எந்த துறைகளாக இருந்தாலும் சரி, சிஐஎஸ்எஃப் வீரர்கள் இல்லாமல் அவற்றின் பாதுகாப்பை நினைத்துப் பார்க்க முடியாது. வீரர்களின் அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகவே இன்று நாடு இந்தத் துறைகள் அனைத்திலும் பாதுகாப்பாக முன்னேறி வருகிறது.

நிர்வாக சீர்திருத்தம், ஆன்மீகம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் இந்திய கலாச்சாரத்தை தமிழ்நாடு வலுப்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் பாரம்பரியம் ஆகியவை இந்திய பாரம்பரியத்தின் பொக்கிஷமாக இருக்கின்றன.

சோழ வம்சத்தின் சிறந்த போர்வீரரும் வீரமிக்க தமிழ் மன்னருமான ஆதித்ய சோழனின் நினைவாக தக்கோலம் தொழிற்பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு, ராஜாதித்ய சோழன் பெயரிடப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம். ஆதித்ய சோழன், சோழர் பேரரசின் பெருமையை முன்னெடுத்து சென்றார். இந்த பூமியில் தான் தனது வலிமையையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்தார்.

முன்னதாக, மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளை பெங்காலி, கன்னடம் அல்லது தமிழ் மொழிகளில் எழுத முடியாது. ஆனால், இன்றைக்கு அனைத்து தாய்மொழிகளிலும் மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளை எழுத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை விரைவில் தமிழில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரை நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார். amit shah attacks stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share