வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்ட தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதிமுக பாஜக வட்டாரங்களில் விசாரணை நடத்திவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த மார்ச் 25ஆம் தேதி இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி உருவாகிறது என்ற விவாதங்கள் அரசியல் அரங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. Amit sha summoned to Annamalai
இந்த நிலையில் எடப்பாடி -அமித்ஷா சந்திப்பின் அடுத்தகட்ட அதிர்வாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்காததுதான் பாக்கி என்கிறார்கள். சில வாரங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா சில முக்கிய மெசேஜ்களை வெவ்வேறு தரப்புகள் மூலம் அனுப்பி கொண்டுதான் இருந்திருக்கிறார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தொழில் செய்து கொண்டிருக்கும் பெரிய தொழில் குழுமத்தோடு பவன் கல்யாண் தரப்பினருக்கு நல்ல தொடர்பு உள்ளது. அதே தொழில் குழுமத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினரோடும் நல்ல தொடர்பு உள்ளது. இந்த வகையில் அரசியல் அல்லாத தனிப்பட்ட வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு பவன் கல்யாண் மூலமாக அமித்ஷாவிடம் இருந்து முக்கிய மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது.
மேலும் கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்தால் எப்போதும் தங்குகிற எம் ஆர் சி நகர் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸுக்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரை அழைத்துப் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்த சம்பவங்களுக்கெல்லாம் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி மார்ச் 25ஆம் தேதி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி மற்றும் அதிமுக நிர்வாகிகளோடு மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார் அமித் ஷா என்கிறார்கள். 50 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
அதாவது அதிமுக சார்பில் அண்ணாமலை ஃபைல்ஸ் என்ற ஒரு வீடியோ மற்றும் வரிவடிவத் தொகுப்பையே அமித்ஷாவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். Amit sha summoned to Annamalai
அண்ணாமலை கடந்த ஓரிரு வருடங்களில் மாநில பாஜக தலைவராக இருந்து கொண்டு அதிமுகவின் மறைந்த தலைவர்கள் முதல் இப்போதைய தலைவர்கள் வரை அவதூறாக- மரியாதை குறைவாக பேசிய பேச்சுகள் அனைத்தையும் வீடியோ வடிவில் தொகுத்தனர். அந்த வீடியோவில் ஹிந்தி சப் டைட்டில் களையும் இணைத்தனர். அவரது பேட்டிகளின் இந்தி மொழியில் வரி வடிவத்திலும் தொகுத்து அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறார்கள்.

‘இதெல்லாம் உங்கள் கவனத்திற்கு வந்ததோ வரவில்லையோ என்று எங்களுக்கு தெரியாது. இவ்வளவு அவதூறாக எங்களது தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்த நிலையில் நாம் கூட்டணி அமைக்கும் போது அதற்கான முழுமையான பலன் கிடைக்காது. இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து செயல்படுவதில் பல தடைகள் ஏற்படும்’ என்று எடப்பாடி தரப்பில் அமித் ஷாவிடம் விளக்கியிருக்கிறார்கள்
அது மட்டுமல்ல தற்போதைய திமுக அரசின் முக்கிய அமைச்சர்களோடு அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் பற்றியும் அது தொடர்பான சில முக்கியமான குறிப்புகளையும் அமித்ஷாவிடம் எடப்பாடி தரப்பினர் அளித்திருக்கிறார்கள்.
அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன அமித்ஷா விரைவில் சந்தித்து மீண்டும் ஒருமுறை அடுத்த கட்ட டெவலப்மென்ட்கள் பற்றி பேசுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அமித்ஷா வீட்டிலேயே தமிழ்நாட்டு வடை பாயாசம் வடநாட்டு உணவுகள் வரை அடங்கிய விருந்து நிகழ்வும் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியோடு அமர்ந்து அமித் ஷாவும் விருந்து உண்டார். இந்த அளவுக்கு சந்திப்பு சுமுகமாக நடந்திருக்கிறது.
அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்ததை பாஜக டெல்லி தலைமை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் முறைப்படி முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. வேறு சில ரூட்டுகள் மூலமாகவே இதை அறிந்து கொண்ட அண்ணாமலை மார்ச் 25 மதியத்திலிருந்து சற்று டென்ஷனோடு தான் இருந்திருக்கிறார். அன்று மாலை நடந்த இப்தார் விருந்து விழாவிலும் அவர் சற்று டென்ஷனோடுதான் இருந்தார் என்கிறார்கள் அவரோடு அந்நிகழ்வில் பங்கு பெற்ற பாஜக நிர்வாகிகள்.

எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட்டதை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று டெல்லியில் தனக்கு நெருக்கமாக இருக்கும் சில முக்கிய நிர்வாகிகளிடம் அண்ணாமலை போன் போட்டு உரிமையாக கேட்டிருக்கிறார். தனது வழிகாட்டியாக கருதப்படும் பி எல் சந்தோஷிடமும் அண்ணாமலை பேசியிருக்கிறார். அப்போது சந்தோஷ், ‘உங்களையும் அழைப்பார்கள். தயாராக இருங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த டென்ஷனில் தான் அன்று மாலை செய்தியாளர்கள் எடப்பாடி டெல்லி பயணம் பற்றி கேள்வி கேட்டபோது, ’உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்’ என்ற தன்னுடைய அக்மார்க் அணுகுமுறையோடு பதில் சொன்னார் அண்ணாமலை.
இவ்வளவுக்கு பிறகுதான் 26 ஆம் தேதி டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அண்ணாமலை.
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி ஆராய்வதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாஜக ஒவ்வொருவரை நியமித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேரளாவைச் சேர்ந்த இப்போதைய பாஜக மாநில தலைவரான ராஜீவ் சந்திரசேகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. Amit sha summoned to Annamalai
அவர் அப்போதே அளித்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனம் ஆனதற்கு, அண்ணாமலையின் பக்குவமற்ற அணுகுமுறை முக்கிய காரணம்’ என்று தெரிவித்திருந்தார்.
அப்போதைய ராஜீவ் சந்திரசேகரின் அறிக்கை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் அண்ணாமலை ஃபைல்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அண்ணாமலைக்கான சம்மன் என்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக பாஜக விவகாரங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது சற்று அதிகமாகவே பங்கெடுக்கிறார் என்கிறார்கள் டெல்லியில். எடப்பாடியை அமித்ஷா சந்திப்பதற்கு முன் அன்று பகலில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அழைத்துப் பேசினார் அமித் ஷா.
அமித்ஷாவை சந்தித்த ஜிகே வாசன், பிறகு நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். அதேபோல நேற்று தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் மதுரை ராம ஸ்ரீனிவாசன் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறார். Amit sha summoned to Annamalai
இந்த பரபரப்பான நிலையில்…. அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பற்றிய விவாதங்கள் கிளைமாக்ஸ் எட்டியிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.