அமித் ஷா பதவி விலக வேண்டும்: சோனியா

Published On:

| By Balaji

டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லியில் நடந்து வரும் வன்முறை கலவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் பின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,

“டெல்லியில் மிகப்பெரிய சதித்திட்டத்துடனேயே இந்த வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன. டெல்லி தேர்தலின் போதே வெறுப்புப் பேச்சுகளையும், வன்முறைகளை உருவாக்கும் பேச்சுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அப்படிப் பேசிய பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்குப் பிறகும் இந்த வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்தன. இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மிகப்பெரிய சதித் திட்டம் இருக்கிறது. இதெல்லாம் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது.

டெல்லியைக் காப்பாற்ற துணை ராணுவப்படையினர் உடனடியாக களமிறக்கப்பட வேண்டும். அதன் பின் தேவைப்பட்டால் ராணுவம் களமிறக்கப்படவேண்டும். டெல்லி கலவரம் பற்றி பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிர்வாகப் பணிகளில் ஈடுபட வேண்டும். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்க வேண்டும்” என்று கூறிய சோனியா காந்தி, “டெல்லி மக்களிடம் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறது. வெறுப்பு அரசியலை புறக்கணியுங்கள். காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு நல்லிணக்கத்தை நிலைநாட்ட அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

டெல்லி கலவரம் பற்றி குடியரசுத் தலைவரை காங்கிரஸ் குழு சந்திப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share