அமித்ஷா வருகை: எடப்பாடியுடன் சந்திப்பு… ஓபிஎஸ் – டிடிவி நிலை என்ன?

Published On:

| By Aara

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு சென்னை வருகிறார்.

இரவு கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் தங்குகிற அமித்ஷா, ஏப்ரல் 11ஆம் தேதி காலை முதல் பிற்பகல் வரை முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை இன்று இரவு அவர் சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். Amit Sha chennai visit meeting with Edappadi OPS-TTV

இது பற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, “அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது உறுதியாகிவிட்டது.

மார்ச் 25ஆம் தேதி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபோது, 2026 இல் திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்றால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வற்புறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதிமுக தலைவர்கள் பற்றி பேசிய அவதூறு பேச்சுகளின் இந்தி தொகுப்பை அமித்ஷாவிடம் அளித்தார்.

அது மட்டுமல்ல தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெறத் தயாராக இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தார் எடப்பாடி.

இந்த நிலையில் சென்னை வருகிற அமித்ஷா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் அமித்ஷாவுடன் சந்திப்பு இறுதி செய்யப்படவில்லை. இதை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் இருக்கும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்றார்.

ஏப்ரல் 11ஆம் தேதி மாலை அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் தான் வைத்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். Amit Sha chennai visit meeting with Edappadi OPS-TTV

இந்த அடிப்படையில் இன்றே ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, ‘தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2024 இல் தேர்தலை சந்தித்தபோது நமக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள். எனவே அவர்களை நாம் கைவிட்டு விடக்கூடாது. தென் மாவட்டங்களில் அவர்கள் நமக்கு உதவுவார்கள். அமித்ஷாவிடம் சொல்லி அவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்ன வலியுறுத்தியிருக்கிறார் அண்ணாமலை. ஆனால் அமித் ஷாவுடன் ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு இரவு வரை இறுதி செய்யப்படவில்லை” என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share