தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் பாஜகவை வளர்த்த மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த இல.கணேசன், கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிக்சிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 15-ந் தேதி மாலை இல.கணேசன் காலமானார்.
இல.கணேசன் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினர்.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின், பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் உடலுக்கு, அவரது கொள்கைகளுக்கு நேர் எதிரான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது அனைவரது கவனம் பெற்றது.

வீரமணியிடம் நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்
கி.வீரமணிக்கு, காதில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நிலையிலும் ‘மாஸ்க்’ அணிந்தபடியே’ இல.கணேசனின் உடலுக்கு நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார் வீரமணி. அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீரமணியின் கைகளை இறுகப் பற்றி நலம் விசாரித்தார்.
அத்துடன், “என்ன இருந்தாலும் நயினார் நாகேந்திரன் நம்ம திராவிடர் இயக்கத்தில் இருந்து அங்கே போனவர்தானே”‘ என வீரமணி கமெண்ட் அடித்தார். இதை நயினார் உள்ளிட்டோர் ரசித்தனர்.
நயினார் நாகேந்திரனும், “ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் நாக்கை அறுப்பேன் என பேசியிருந்தேன். அந்த பிரச்சனை நடந்த சமயத்தில் நெல்லைக்கு வீரமணி வந்திருந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் என்னை மேலோட்டமாகத்தான் விமர்சித்தார்..” என தம்மை சுற்றி நின்றவர்களிடம் நினைவு கூர்ந்தார்.
வீரமணியின் இரங்கல் செய்தி
இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தாம் வெளியிட்ட அறிக்கையையும் அங்கே இருந்தவர்களிடம் கொடுத்தார் வீரமணி.
அந்த அறிக்கையில், ” நாகாலாந்து ஆளுநரும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கொள்கைகளைப் பரப்பிய முக்கிய கொள்கையாளருமான நண்பர் இல. கணேசன் அவர்கள் (வயது 80) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
கொள்கையில் நேர் எதிரானவர்களான நாங்கள் இருவரும், நட்பில் நல்ல நண்பர்கள் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட நன்கு அறிவர். கொள்கை வேறு; பண்பாடு – நட்பு வேறு.
மேடையில் பேசினாலும் நனி நாகரிகத்துடன் பேசி எவரிடத்திலும் அப்படியே நடந்து கொள்ளும் நல்ல மனிதர்” என வீரமணி குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை பெரியார் திடலுக்கு அழைத்த வீரமணி
பின்னர், இல. கணேசன் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழகப் பொறுப்பாளர் பிரதேஷ்குமார் உள்ளிட்டோரும் இருந்தனர். கி.வீரமணியிடம் சென்ற பிரதேஷ்குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள்,
“அய்யா உடல்நலம் எப்படி இருக்கு.. உடல் நலனை பார்த்துக்குங்க அய்யா” என சொல்ல,
கி.வீரமணியும், “நலமாக இருக்கிறேன்” என பதிலளித்துவிட்டு,
“கொள்கையில் மாறுபாடு கொண்டவராக இருந்தாலும் பண்பாளராக இருந்தார் இல.கணேசன் ” எனப் பெருமிதமாக பேசினார்.
பின்னர், “நீங்க எல்லாம் பெரியார் திடலுக்கு வாங்க.. நிறைய பேசுவோமே” என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கி.வீரமணி அழைத்தார்.
இதற்கு, “சரிங்க அய்யா.. நாங்க கண்டிப்பாக வருகிறோம்” என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பதில் சொல்ல எல்லோரும் உற்று கவனித்தனர்.

சீமானை சந்திக்க விரும்பிய ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்
இதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இல.கணேசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். சீமானின் கரங்களைப் பிடித்தபடியே தமிழக பாஜக தலைவர் நயினார் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் இல.கணேசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சீமானிடம், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழ்நாடு பொறுப்பாளரான பிரதேஷ்குமார், “உங்களைப் பார்க்க வரனுமே” என கூறினார்.
இதற்கு பதிலளித்த சீமான், “வாங்க நாம பேசலாம்” என அழைத்தார்.
அதிமுக ஜெயக்குமார்
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் வந்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் இதர தலைவர்கள் யாரும் வரவில்லை என்பது கவனிக்கப்பட்டது.
மோடி சார்பாக மரியாதை செலுத்திய ஸ்டாலின்
இல.கணேசன் உடலுக்கு முதல் நாளே முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, உள்ளூர் திமுகவினர் தயாராக வைத்திருந்த மலர்மாலையை வாங்கி, ‘திமுக- கட்சி’ சார்பாக இல.கணேசனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
இதன் பின்னர் நேற்று ஆகஸ்ட் 16-ந் தேதி, பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, பிரதமர் மோடி சார்பாக, இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இல.கணேசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு, பிரதமர் மோடியின் சார்பாக “ON BEHALF OF HON’BLE PRIME MINISTER OF INDIA SHRI NARENDRA MODI” என எழுதப்பட்டிருந்த மலர் வளையத்தை வைத்து
முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்; தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக “ON BEHALF OF HON’BLE CHIEF MINISTER OF TAMILNADU THIRU M.K.STALIN”
என்று எழுதப்பட்டிருந்த மலர் வளையத்தை வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.

இல.கணேசன் உடல் தகன நிகழ்வில் தமிழக அமைச்சர்கள்
இதன் பின்னர் சென்னை மாநகராட்சி அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்தது. இல.கணேசன் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில்- பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி, ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பெசன்ட் நகர் மயானத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் என அமர்ந்திருந்த வரிசையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் தலைவர்கள் யாருமே இல்லை.
அதிமுகவினரின் குழப்பம்
இப்படி இல.கணேசன் இறுதி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் கவனம் பெற்றிருந்தாலும், அதிமுகவினரிடையே ஒருவித குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்; அதே நாளில் டெல்லியில் இருந்து பிரதமர் அலுவலகம் முதல்வர் ஸ்டாலினை பிரதமர் சார்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த சொல்கிறது.. இதில்தான் எங்கேயோ இடிக்கிறதே.. என அதிமுகவினர் குழப்பமடைந்துள்ளனர் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
பாஜகவினரின் ஆதங்கம்
அத்துடன், பாஜகவினரும், “இங்க திமுகதான் ஆட்சியில் இருக்குது.. முதல்வர் ஸ்டாலின் முதல் திமுகவினர் இவ்வளவு சிறப்பா மரியாதை செய்றாங்க.. ஆனால் நம்ம கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மட்டும் வெளியிட்டார்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மட்டும் அனுப்ப் வைச்சாங்க” என ஆதங்கப்பட்ட குரலும் நம் காதில் விழுந்தது.
திமுகவினரோ, தலைவர் கலைஞர்கிட்ட ரொம்ப மரியாதையாகவும் பாசமாகவும் இருந்தவர் இல.கணேசன். அதே மாதிரிதான் சிஎம் ஸ்டாலினிடமும் அன்பாக இருந்தார். என்னதான் கொள்கையில் மாறுபட்டவராக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் இல.கணேசன் நம்ம மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே.. அதனால உரிய மரியாதை செலுத்துகிறோம் என்றனர்.
