வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை: ட்ரம்ப் அதிரடி!

Published On:

| By Balaji

ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலைவாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளைப் பயில சிறந்த இடமாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா செல்கின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கக் குடியுரிமைத் துறை கடந்த மாதம் அறிவித்தது. இது வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமின்றி அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விஷயத்தில் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்த ஹார்வர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ADVERTISEMENT

ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும், அந்த நாட்டின் பல்கலைக்கழகங்களும் நிம்மதி அடைந்தன.

இந்த நிலையில் அமெரிக்காவில் முழுவதும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாகக் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில், “மார்ச் 9ஆம் தேதிக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மார்ச் 9ஆம் தேதிக்கு முன்னர் கல்வி விசாக்களைப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் புதிய மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share