கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு தேசிய அவசர நிலையை அறிமுகப்படுத்தினார் அதிபர் ட்ரம்ப். 5000 கோடி டாலரையும் கொரோனா மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகளவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவி வரும் நிலையில் 2020 மார்ச் 16 முதல் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றம் இல்லாதவர்கள் அனைவருக்கும் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது.
விசாவுக்கு யாரேனும் விண்ணப்பித்து நிலுவையிலிருந்தால் அது ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் விசா நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தபின் வழக்கம் போல் விசா வழங்குவதற்கான நடைமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ வெள்ளை மாளிகைக்கு வந்து சென்றதைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து வெளியான தகவலுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்று தெரியவந்ததாகத் தெரிவித்தார். இந்நிலையில் தாமும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
**கவிபிரியா**
