அமெரிக்காவின் 2023-2024 நிதியாண்டின் பற்றாக்குறை 1.83 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்று அந்நாட்டின் நிதித்துறை அறிவித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில், அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்துதான் சீனா, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வரிசையாக வருகின்றன.
இந்தியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நிதியாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31ஆம் தேதி முடிவடையும். ஆனால் அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அக்டோபர் 1 ஆரம்பிக்கும் நிதி ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும்.
இந்த நிலையில் தான், அமெரிக்கா இதுவரை வாங்கிய கடனின் வட்டியே முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளதால், 2023-24 நிதியாண்டின் நிதி பற்றாக்குறை 1.83 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் நிதித்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8% சதவீதம் அதிகம். அதாவது 13,800 கோடி அமெரிக்க டாலர்.
2020 நிதியாண்டின் 3.132 லட்சம் கோடி மற்றும் 2021 நிதியாண்டின் 2.772 லட்சம் கோடி பற்றாக்குறைக்குப் பிறகு, அமெரிக்க வரலாற்றில் இது மூன்றாவது பெரிய நிதி பற்றாக்குறையாகும்.
வருகிற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று, அவரது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், நிதி பற்றாக்குறை மேலும் 7.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் கூடும். இதுவே கமலா ஹாரிஸின் திட்டத்துக்கு தேவையான 3.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை விட ஒரு மடங்கு உயரும் என பொறுப்பான கூட்டாட்சி பட்ஜெட்டுக்கான குழு(Committee for a Responsible Federal Budget) என்ற நிதி சிந்தனை குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நெருங்கும் தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் வைத்த முக்கிய கோரிக்கை!
ஒரே நாளில் 20 வெடிகுண்டு மிரட்டல் : ரூ.80 கோடி இழப்பு… டிஜிசிஏ டிரான்ஸ்ஃபர்!
புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்