”நான் தல ரசிகன் தான்” : எல்லை மீறிய விமர்சனம்… பொங்கியெழுந்த அம்பத்தி ராயுடு

Published On:

| By christopher

ambati rayudu angry reply against trolls to support dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனிக்கு ஆதரவாக பேசியதற்காக விமர்சிக்கப்பட்டு வரும் அம்பத்தி ராயுடு, இன்று (ஏப்ரல் 10) தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். ambati rayudu angry reply against trolls to support dhoni

கடந்த 8ஆம் தேதி சண்டிகரில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் வர்ணனையாளராக இருந்த ராயுடு மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த போட்டியில் 16வது ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வந்தார். வழக்கம்போல அவரது வருகையை உற்சாக குரலெழுப்பி ரசிகர்கள் கொண்டாடினர்.

அப்போது வர்ணனை செய்த சித்து, “தோனி படிக்கட்டுகளில் இருந்து ஓடி வருகிறார். அவரது ஓட்டத்தின் மூலம் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தோனியின் தீவிர ரசிகரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடு, ”எம்.எஸ். தோனி பேட்டுடன் அல்ல, வாளுடன் வெளியே வருகிறார். இன்றிரவு தோனியின் வாள் சரமாரியாக விளாசும். அது அவரது நடையில் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில், அவர் அமைதியாக நுழைந்தார், ஆனால் இன்றிரவு அப்படியல்ல. நாம் ஒரு பயமற்ற தோனியைக் காணப் போகிறோம்” என உணர்ச்சிவசமாக பேசினார்.

அம்பத்தியின் வார்த்தைகளை கவனித்த சித்து, “நீங்கள் அவர் கிரிக்கெட் விளையாட வரவில்லை, போரை நடத்த வருகிறார் என்று சொல்கிறீர்கள்” என கிண்டலடித்தார்.

அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் விளாசினார். எனினும் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் அவுட் ஆக, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.

இதனையடுத்து தோனிக்கு எதிராகவும், அவரை குறித்து வர்ணனையில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய அம்பத்தி ராயுடுவுக்கு எதிராகவும் விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று பதிலளித்துள்ளார் அம்பத்தி ராயுடு.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.

எனவே தயவுசெய்து பணம் செலுத்திய PR-க்கு பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குங்கள். பல பின்தங்கிய மக்கள் பயனடையலாம்” என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடங்கிய அம்பத்தி, எட்டு சீசன்கள் அங்கு விளையாடினார். அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 முதல் 2023 வரை 6 ஆண்டுகள் விளையாடி, ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share