“செவ்வாய்க்கிழமை ஆபத்து!” – மீண்டும் வேலையை பறிக்கும் அமேசான்… காரணம் என்ன சொன்னார் சி.இ.ஓ?

Published On:

| By Santhosh Raj Saravanan

amazon plans second round job cuts 30000 target andy jassy statement business news tamil

உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ஆயிரக்கணக்கானோர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் இரண்டாவது சுற்று ஆட்குறைப்பு (Second Round of Job Cuts) நடவடிக்கையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த முறை சுமார் 16,000 கார்ப்பரேட் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

எப்போது? யாரெல்லாம் பாதிப்பு? நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) முதலே தொடங்க வாய்ப்புள்ளது.

  • அமேசானின் மொத்த இலக்கு 30,000 ஊழியர்களைக் குறைப்பதாகும்.
  • இதில் ஏற்கனவே அக்டோபர் மாதம் நடந்த முதல் சுற்றில் 14,000 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள எண்ணிக்கை இந்த வாரம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பாதிக்கப்படும் துறைகள்: இந்த முறை அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), ரீடைல் பிரிவு, பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை (HR) ஆகியவற்றில் அதிகக் குறைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

சி.இ.ஓ ஆண்டி ஜாசி (Andy Jassy) சொன்ன காரணம் என்ன? பொதுவாக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும்போது “பொருளாதார நெருக்கடி” அல்லது “செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி” என்று காரணம் சொல்வார்கள். ஆனால், அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜாசி கூறிய காரணம் சற்று வித்தியாசமானது.

ADVERTISEMENT

அவர் அண்மையில் முதலீட்டாளர்களிடம் பேசும்போது, “இந்த ஆட்குறைப்பு பணப் பிரச்சனைகளுக்காகவோ (Financially driven) அல்லது ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்காகவோ செய்யப்படவில்லை. இது முழுக்க முழுக்க நிறுவன கலாச்சாரம்‘ (Culture) சார்ந்தது,” என்று விளக்கமளித்துள்ளார்.

அதிகப்படியான அதிகாரிகள்!” “கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மிக வேகமாக வளர்ந்துவிட்டோம். இதனால் நிறுவனத்திற்குள் தேவையில்லாத பல அடுக்குகள் (Layers) உருவாகிவிட்டன. ஒரு வேலையைச் செய்ய அதிகப்படியான மேலாளர்கள் (Managers) இருப்பதால் வேகம் குறைகிறது. பழைய ஸ்டார்ட்-அப் வேகத்திற்குத் திரும்பவே இந்த நடவடிக்கை,” என்று ஜாசி கூறியுள்ளார். அதாவது, ‘பியூரோக்ரசி’ (Bureaucracy) எனப்படும் நிர்வாகச் சிக்கல்களைக் களைவதே இதன் நோக்கம் என்கிறார் அவர்.

ADVERTISEMENT

இருப்பினும், அக்டோபர் மாதம் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், “ஏஐ (AI) தொழில்நுட்பம் நிறுவனங்களை வேகமாக மாற்றுகிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, ஏஐ-யினால் ஏற்படும் வேலை இழப்பை மறைமுகமாக ‘கலாச்சார மாற்றம்’ என்று நிர்வாகம் அழைக்கிறதா என்ற கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விடியும்போது, பலரது மின்னஞ்சலில் “பணிநீக்கக் கடிதம்” காத்திருக்கலாம் என்ற அச்சம் அமேசான் வளாகங்களில் பரவியுள்ளது.

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share