கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Amarnath Ramakrishna transferred
2014-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023-ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் சமர்ப்பித்தார்.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மத்திய அரசு, திருத்தம் செய்ய கோரி அந்த அறிக்கையை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியது.
இதற்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இன்று (ஜூன் 17) கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!” என்று அழைப்பு விடுத்தார்.

இந்தசூழலில் கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், “பண்டைய கால மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றுவார்.
பண்டைய கால ஆய்வுத் துறை, ஹெச்.ஏ. நாயக்கிடம் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார். Amarnath Ramakrishna transferred