ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படமான “அமரன்” ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து அமரன் படத்தை தயாரித்துள்ளது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மைய கதையாக கொண்டு அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை படக் குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயனின் கடின உழைப்பை கண்ட ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமரன் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழுவினர் “சல்யூட் மேஜர் முகுந்த்” என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், மேஜர் முகுந்த் வரதராஜன் பிறப்பு, அவரது ராணுவ கனவு, ராணுவத்தில் அவர் செய்த வீர சாகசங்கள் என அவரின் வாழ்க்கை வரலாறு மிக தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் “காற்று அசைவதால் நமது தேசியக்கொடி பறப்பதில்லை. அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக்கொடி பறக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார். விரைவில் அமரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…