amar prasad reddy bail petition
பெண் பாஜக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் தேவி மற்றும் ஆண்டாள். பாஜக மாவட்ட துணைத் தலைவியாக ஆண்டாள் பதவி வகித்து வருகிறார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைப்பதற்காக ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது,
ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளிட்டோர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆண்டாளின் அக்கா தேவியின் மண்டை உடைந்த நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரில்,
‘பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கூறியதன் பேரில் எங்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த அவரது ஓட்டுநர் ஸ்ரீதர், கஸ்தூரி மற்றும் நிவேதா உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி தாக்குதல் என 147, 452, 323, 324, 354, 427, 506/1 உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், கார் ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் முன்ஜாமீன் கோரி அமர்பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க குஜராத், டெல்லி, மும்பை ஆகிய மாநிலங்களுக்கு 3 தனிப்படைகள் அமைத்து தேட காவல்துறை முடிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
’ஹனுமான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி வேண்டுகோள்!
ஜி20 மாநாடு இந்தியாவை வலுப்படுத்தியுள்ளது: திரவுபதி முர்மு
சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு படம்… ரிலீஸ் தேதி இதோ!
amar prasad reddy bail petition