வெளிப்படையாக பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகரும், அரசியல்வாதியுமான ராதாரவி. திமுக, அதிமுக என்று மாறி மாறி கட்சி தாவி வந்தவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை வந்த பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பாஜகவில் சேர்ந்த போதும் கட்சி தாவுவது போன்று, தனது சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அடிக்கடி சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார் ராதாரவி.
பாஜக கட்சி மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, ’கேட்டா ஒரு டீ கூட கொடுக்க மாட்டேங்குறாங்க?’ என்று சொந்த கட்சியினரேயே விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நமது மின்னம்பலம் யூடியூப் தளத்திற்கு ராதாரவி அளித்த சமீபத்திய பேட்டியில் நான் இப்போது பாஜக கட்சியில் இல்லை என்று கூறியுள்ளார்.
நான் எந்த கட்சியிலும் இல்லை!
அந்த பேட்டியில் அவர், “நான் 30 வருஷம் திமுகவில் இருந்தவன். 18 வருஷம் அதிமுகவில் இருந்தவன் இதுக்கு மேல இங்கு யாரு இருக்கா அரசியல் பேசுறதுக்கு? இப்போ பாஜக வந்திருக்காங்க வரட்டும், யாரு வந்தா என்ன?” என்று கேட்டார்.
நீங்கள் பாஜகவில் தானே இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ”இல்லைங்க நான் இப்ப எந்த கட்சியிலும் இல்லை. நான் இருக்கேனா இல்லயானு கூட அவங்களுக்கே தெரியாது.(சிரிக்கிறார்). ஆனா ஒன்னு, ஸ்டாலினோ, உதயநிதியோ கலைஞரோட ஃபேமிலில இருந்து வந்து கட்சிய அழியாம பாத்துகுறாங்க பாருங்க அத நாம பாராட்டி தான் ஆகனும்.
கலைஞரோட குடும்பம் அரசியலுக்கு வருதேனு நெறய பேர் கேக்குறாங்க. ஏன் வரக்கூடாது என்பது தான் என்னுடைய கேள்வி. அவங்க வரட்டும் அது தப்பில்ல.
சகோதரர் ஸ்டாலின் கட்சியிலேயே இருந்து பாடுபட்டவர். அவர் பாராட்டுற விதமா நெறய விஷயம் இப்போ பண்ணிட்டு இருக்காரு.
உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வரா வர போறாருனு பேசிட்டு இருக்காங்க. வரும்போது பாத்துக்குவோம். அப்படி பேச்சு வந்துட்டே தாங்க இருக்கும். என்கிட்டயே வந்து ’நீங்க திமுகவுல சேர போறீங்க போல’னு சொல்லுவாங்க. அவர்களிடம் வச்சிக்க என்று சொல்லிடுவேன். இப்போ எதுக்கு அவங்ககிட்ட போய் சண்ட போட்டுகிட்டு?” என்று ராதாரவி பேசியுள்ளார்.
திமுக அதிமுக என்று மாறி மாறி கட்சி தாவி வந்த ராதாரவி, பாஜகவிற்கு சென்ற நிலையில் ’இப்போது எந்த கட்சியிலும் நான் இல்லை’ என்று கூறியுள்ளதும்,
தமிழக பாஜக கடுமையாக தாக்கி வரும் வாரிசு அரசியலை ஆதரித்தது மட்டுமின்றி ஸ்டாலின், உதயநிதியை பாராட்டியுள்ளதும் அவர் மீண்டும் திமுகவில் இணைகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நேர்காணல்: ஃபெலிக்ஸ்
தொகுப்பு: கிறிஸ்டோபர்
