சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். அந்தவகையில், Alt News இணை நிறுவனர் முகமது ஜூபேருக்கு மத நல்லிக்கணத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது. இதனால் தமிழகத்தில் வேலைக்காக வந்த பலரும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இந்த விவகாரத்தில் போலி செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது.

மேலும், பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வடமாநில தொழிலாளர்களை நாங்கள் பாதுகாப்போம் என்று உறுதியளித்தார்.
இந்தசமயத்தில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்களை கண்டறிந்து, உண்மையில் அந்த சம்பவங்கள் எங்கு நடைபெற்றது என்று Alt News இணையதளம் செய்தி வெளியிட்டது.
மேலும் ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபேர் தொடர்ச்சியாக போலி வீடியோக்களுக்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், போலி செய்திகளை உண்மை கண்டறிந்து வெளியிட்டதற்காக முகமது ஜூபேருக்கு மதநல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், ரூ.25 ஆயிரம் காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது குறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு முகமது ஜூபேர் அளித்த பேட்டியில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய பணிகளை தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது.
நம்மை சுற்றி பல போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அந்த போலி செய்திகளை உண்மை கண்டறிந்து சரியான நேரத்தில் வெளியிடுவது மிகவும் அவசியம்.
தமிழக அரசு எங்களுடைய பணியை அங்கீகரித்துள்ளது. தமிழகத்தில் பிகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ச்சியாக போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது. இதன் உண்மை அறியாத பலரும் தமிழக அரசையும், தமிழக மக்களையும் விமர்சித்தார்கள்.
இதுகுறித்து பலரும் உண்மை செய்திகளை வெளியிட்டோம். குறிப்பாக நாங்கள் தொடர்ச்சியாக இதுகுறித்து செய்திகளை வெளியிட்டு வந்தோம். குறிப்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறையுடன் இணைந்து பல போலி வீடியோக்களை கண்டறிந்தோம்.
மிக சொற்பமான உண்மை கண்டறியும் செய்தி தளங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் ரீச் இல்லை.
போலி வீடியோக்கள், செய்திகள் வெளியாகும் போது உண்மை செய்தியை கண்டறிய நேரமாகும். சில சமயங்களில் 3 மணி நேரம், சில சமயங்களில் 1 நாள் கூட ஆகும்.
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி என்ற ஊரில் பிறந்தேன். பள்ளி படிக்கும் போது தான் எனது குடும்பம் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தது. தற்போது நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். தளியில் எங்களுக்கு சொந்தமான பழைய வீடு இருக்கிறது” என்று ஜூபேர் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஏழையா செத்தாலும்” பிக்பாஸ் போட்டியாளரின் திடீர் பஞ்ச்!
அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ முகாம்கள்: அன்புமணி வலியுறுத்தல்!
