பெரியார் வழியில் ராகுல்.. காங்கிரசுக்கு உள்ளிருந்தே RSS வழியில் சிலர் – ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடந்த டிச. 24 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “அதிமுக ஆட்சியை விட்டு விலகியபோது, ​​தமிழ்நாடு எந்தவித வளர்ச்சியும் இல்லாமல், கடன்சுமையால் சூழப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது திமுக தமிழ்நாட்டை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்து தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

ADVERTISEMENT

இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பதிவில், “‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, ‘காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு’ ஒப்பிடுகிறார்.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் ஒன்றிய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.

‘காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது’ என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.

‘ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்’ என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது.

ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share