நரிக்குறவப் பெண்ணுக்கு கடை வழங்கிய கலெக்டர்!

Published On:

| By Prakash

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர்களுக்கு கடை மற்றும் கடன் உதவிக்கான ஒப்பந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இன்று (ஆகஸ்ட் 18) வழங்கினார்.

2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தீபாவளியன்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பழங்குடியினர் குடியிருப்புக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின்,

நரிக்குறவர் இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினார். ஆனால், இந்த ஆணைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, தனக்கு கொடுத்த கடன் இன்னும் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தது மீடியாக்களில் வைரலானது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18)அப்பகுதி நரிக்குறவர்களுக்கு கடை மற்றும் கடன் உதவிக்கான ஒப்பந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வழங்கினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அஸ்வினி உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க தயார் நிலையில் உள்ளது.

அஸ்வினிக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.

மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி தெரிவித்ததால்தான் தாமதம் ஆகியது.

அதில் இன்று (ஆகஸ்ட் 18) 5 பேருக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை (ஆகஸ்ட் 19) வங்கிகள் விடுமுறை என்பதால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) அவர்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, அவர்களுக்கு 66 கடைகள் மாமல்லபுரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தன. அதை அஸ்வினி நிராகரித்துவிட்டார்.

அந்தக் கடைகளை அவர் நிராகரித்ததன் காரணமாக, இன்றைய தினம் (ஆகஸ்ட் 18) இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு ஒரு கடை வழங்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

நரிக்குறவப் பெண் புகார்: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share