தமிழகத்துக்கு கல்வி நிதியை வழங்குங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

Allocate education funds to Tamil Nadu

தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Allocate education funds to Tamil Nadu

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  ஆனால் இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

ADVERTISEMENT

இதனால் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படவில்லை.

எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க கோரி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனு கடந்த மே 22ஆம் தேதி நீதிபதிகள் ஜி.எஸ். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழகத்துக்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ADVERTISEMENT

இதற்கு மத்திய அரசு தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. 

இதற்கு தமிழக அரசு சார்பில் மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 25 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த வழக்கு மீண்டும் மே 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, “புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கல்வித் தொகை ஒதுக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

பல்வேறு மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

அதேசமயம் 25 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நடத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தசூழலில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை மத்திய அரசும், 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், 2021 -2023 வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது” என்று மாநில அரசு சார்பில் வழக்கறிஞர் ரவீந்தர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (ஜூன் 10) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ”கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்பு படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். Allocate education funds to Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share