ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் கூட்டணியா? மூவர் வைத்த மூன்று ஆலோசனை…விஜய் சொன்ன பதில்! சர்வே முடிவு… 3 கட்சிகளின் ரியாக்‌ஷன்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்த உடன் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான தகவல்கள் விறுவிறுவென விழத் தொடங்கின. இவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

நடிகர் விஜய்யின் தவெகவைப் பொறுத்தவரையில் 10,12-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா, கடலூரில் பூத் கமிட்டிக் கூட்டம் மற்றும் திருச்சி அரசியல் மாநாடு ஆகியவை குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலோசனைகளுக்கு நடுவே கூட்டணி தொடர்பான விவாதங்களும் நடைபெறுகின்றனவாம்.

ADVERTISEMENT

கூட்டணி தொடர்பாக விஜய் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை கடைசியாக பார்ப்போம்.

மாணவர்களுக்கு விஜய் நடத்த இருக்கும் பாராட்டு விழாதான் தற்போதைய முதல் அஜெண்டாவாம். ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விஜய் பரிசுகள் வழங்கி பேசுவது வழக்கம். இந்த ஆண்டு தற்போது 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. மே 16-ந் தேதி நாளைதான் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் விவரத்தை உடனே தலைமைக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால் 10-ம் வகுப்பு மாணவர்களை விட, தவெகவின் மாவட்ட நிர்வாகிகள்தான் நாளைய பொழுது விடிவதை ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனராம்.

ADVERTISEMENT

தவெக நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில் இன்னொரு முக்கியமான ஏற்பாட்டையும் பகிர்ந்து கொண்டனர். மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி முடித்த கையோடு, அடுத்த பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தப் போகிறாராம் விஜய். கோவை குலுங்க குலுங்க நடத்தியதைப் போல இந்த முறை பூத் கமிட்டி கூட்டத்துக்கு கடலூரை தேர்வு செய்து வைத்துள்ளாராம் விஜய். வட தமிழ்நாட்டில் விஜய்-க்கு செல்வாக்கு இருக்கிறது என நம்பப்படுகிற நிலையில் கடலூர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை ரொம்பவே சிறப்பாக நடத்திவிட வேண்டும் என தவெக தலைமை கறார் உத்தரவை போட்டுள்ளதாம்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரம்மாண்டமான அரசியல் மாநாட்டை நடத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் நடிகர் விஜய். ஏற்கனவே தொடக்க விழா மாநாடு நடத்தவே இடம் கிடைக்காமல் மதுரை, ஈரோடு, திருச்சி என அலைந்து கடைசியாகத்தான் விக்கிரவாண்டி
வி.சாலையில் இடம் கிடைத்தது. இந்த முறை அப்படி எல்லாம் அலையாமல், திருச்சியில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்துவோம் என முடிவெடுத்துள்ளனராம். இதனால் திருச்சி சுற்றுவட்டாரத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஒரு சேர எப்பகுதியில் கிடைக்கும் என ‘தீயாய்’ அலைகின்றதாம் தவெக டீம். பொதுவாக திருச்சியில் சிறுகனூர் பகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரம்மாண்ட மாநாடு நடத்தும். இதனால் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரும் ஒரு சாய்ஸில் இருக்கிறதாம்.

ADVERTISEMENT

விஜய் கட்சியின் அடுத்தடுத்த ‘ஸ்கெட்ச்’ பற்றி விரிவாக சொல்லிவிட்டு கூட்டணி முடிவுகள் பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது அல்லவா? அதற்கு முன்னதாக திமுக, அதிமுகவை ஜெர்க் அடிக்க வைக்கும் ஒரு சர்வே பற்றி கிடைத்த தகவலைத் தருவோம்.

நடிகர் விஜய்க்கு சில நிறுவனங்கள், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என சர்வே முடிவுகளை அனுப்பி வைத்ததாம். அந்த சர்வேக்கள் அனைத்திலுமே, விஜய்யின் தவெகதான் அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும்; திமுகவுக்கு 2-வது இடம்; அதிமுக கூட்டணிக்கு 3-வது இடம்தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதாம்.

விஜய்க்கு இந்த சர்வே உள்ளூர மகிழ்ச்சியை தந்தாலும் அவராலேயே நம்ப முடியாமல் ‘சர்வே’ குறித்து ‘ஆய்வு’ செய்கிறாராம். இதே சர்வே முடிவுகள், திமுக- அதிமுக தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாம். இந்த கட்சிகளின் தலைமைகளோ, அலட்டிக் கொள்ளாமலேயே இந்த சர்வேயில் உள்ள முடிவுகள் சரியா? தவறா? என்கிற ஆராய்ச்சி நடத்த சொல்லி இருக்கின்றனவாம்,.

சரி இப்ப கூட்டணிக்கு வருவோமா?

தவெக யாருடன் கூட்டணி என்ற மில்லியன் டாலர் கேள்வியை முன்வைத்து அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நாம் பேசுகையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைப் பொறுத்தவரையில், அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறாராம். பாஜகவை விட்டு வந்தால் அதிமுகவிடம் சரிபாதி தொகுதிகள் + சுழற்சி முறையில் முதல்வர் பதவி- அதாவது இரண்டரை ஆண்டுகளுக்கு அதிமுகவுக்கு முதல்வர் பதவி; அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தவெகவுக்கு முதல்வர் பதவி என்கிற பார்முலாவை முன்வைக்கிறாராம்.

தவெகவின் மற்றொரு முக்கிய ‘தலையான’ ஜான் ஆரோக்கியசாமியோ, யாருடனும் நாம கூட்டணி சேரவே வேண்டாம்; நம்ம தலைமையில்தான் கூட்டணி அமையனும்.. ஏன்னா நாமதானே ஆட்சி அமைக்கப் போகிறோம் என திட்டவட்டமான நம்பிக்கையோடு பேசிக் கொண்டிருக்கிறராம்.

தவெகவின் மற்றொரு மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்; கணிசமான தொகுதிகளைக் கேட்டு வாங்குவோம் என மைல்ட் டோனில் பேசிக் கொண்டிருக்கிறாராம்.

இத்தனை ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட நடிகர் விஜய், திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி என்பது ஓகேதான்.. ஆனால் பாஜக இருக்கிறதே? என புதிர் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார் என Sent -ஐ தட்டிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share