தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மும்பைக்கு திடீரென பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரேமலதாவை சந்திக்கவில்லை. இது தொடர்பாக பிரேமலதா கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு யாரும் எங்களை அழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
விஜய்யின் தவெக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரக் கூடும் என்பதால் தேமுதிகவுடன் தற்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையு நடத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா, பியூஷ் கோயலுக்கு அறிவுறுத்தி இருந்ததாக நாம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 10 சட்டமன்ற தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவியை கேட்கிறது தேமுதிக. இந்த நிபந்தனை குறித்து கமிட் செய்யக் கூடாது என்பதற்காக பியூஷ் கோயலை பேச்சு நடத்த வேண்டாம் என அமித்ஷா கூறினார்.
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் திமுக தரப்புடனான பேச்சுவார்த்தையையும் தற்காலிகமாக பிரேமலதா நிறுத்தி வைத்துள்ளார்.
பிரதமர் மோடியின் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் நிலையில் இன்று அதிகாலை 5.45 மணி விமானத்தில் பிரேமலதா, மும்பைக்கு சென்றார். அவருடன் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.
பிரேமலதாவின் இந்த திடீர் பயணம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்காகவா? அல்லது திமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்காவா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சொந்த விஷயமாக பிரேமலதா, தமது மகன்களுடன் மும்பை சென்றுள்ளாரா? என்பதும் தற்போது வரை தெரியவில்லை.
பிரேமலதாவின் திடீர் மும்பை பயணம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
