கடலூரில் தேமுதிகவின் உரிமை மீட்பு மாநாடு இன்று ஜனவரி 9-ந் தேதி மாலை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர்- பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவே விருத்தாசலம் சென்றடைந்தார் பிரேமலதா. இம்மாநாட்டில் பங்கேற்க தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தே.மு.தி.க. கட்சி கொடியை பிரேமலதா ஏற்றியயைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் மாநாட்டுக்கு பிரேமலதா தலைமை வகிக்கிறார். இம்மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிகவின் கூட்டணி குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என தெரிகிறது. அதேபோல விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பிரேமலதா போட்டியிடக் கூடும் என்ற அறிவிப்பும் இன்றைய மாநாட்டில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
