“வாக்காளர்களுக்கு தலா ரூ.2,000!” – தவெக எம்.எல்.ஏ மீதே அக்கட்சி வேட்பாளர் பகீர் குற்றச்சாட்டு!

By Pandeeswari Gurusamy

|

Published on 4 Jun 2026, 12:37 PM

Vijay

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன், ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்ததாக ஓமலூர் தவெக வேட்பாளர் பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் விஜய், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அதியமான். இவர் சமீபத்தில் ஓமலூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் ஓமலூர் தொகுதிக்கு அருகே உள்ள சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் லட்சுமணன், 100% வாக்காளர்கள் அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் கொடுத்ததுதான். இது ஓமலூர் தொகுதியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நமக்கு 5,000 முதல் 6,000 வாக்குகள் வரை இழப்பு ஏற்பட்டது; அதற்கு மேல் கூட இழப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், முதல்வர் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பணம் கொடுக்காமல் தவெக வெற்றி பெற்றுள்ளது” என்று அவர் பேசியிருந்தார்.

ஆனால், இப்போது தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரே, தன் கட்சியின் மற்றொரு வேட்பாளர் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வாக்காளர்களுக்கு 2,000 ரூபாய் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக-வைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரே, தன் கட்சி வேட்பாளர் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகப் பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel