டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 21) அவர் மீது உள்ளக விசாரணையை தொடங்கியிருக்கிறது. allahabad bar counsil against judge Yashwant Varma
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயாவிடமிருந்தும் உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டிருக்கிறது.
இந்தசூழலில் நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று நீதிமன்றத்துக்கு வரவில்லை.அவர் விடுப்பில் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்ற ஊழியர்கள் கூறுகின்றனர்.
என்ன நடந்தது?
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஹோலி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் நீதிபதி வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல்தெரிவிக்க, அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
அப்போதுதான் யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுகட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.
அந்த பணம் முழுவதும் கணக்கில் காட்டப்படாத பணம் என்றும் அதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் தான் யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாங்கள் என்ன குப்பை தொட்டியா?

முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள நீதிபதி பதவி விலக வேண்டும் என்று ஒரு பக்கம் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், அலகாபாத் பார்கவுன்சில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்கவுன்சில் வெளியிட்ட அந்த அறிக்கையில், “நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படட்து அதிர்ச்சியளிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு குப்பைத் தொட்டியா என்ற கடுமையான கேள்வியை எழுப்புகிறது.
தற்போதைய சூழ்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. பார் அசோசியேசனில் உள்ள உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது, பார் அசோசியேசனிடம் கலந்து ஆலோசிப்பதில்லை என்பது மிகுந்த கவலைக்குரியது.
தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதோ குறைபாடுகள் இருப்பதால்தான் இதுபோன்று ஊழல் நடக்கிறது. மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை குறைகிறது.
இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுப்பதற்காக சங்க பொதுக் கூட்டம் 24ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா? allahabad bar counsil against judge Yashwant Varma
அலகாபாத்தில் 1969ல் பிறந்தவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்ற இவர், மத்தியப் பிரதேசத்தின் ரேவா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார். 1992ல் வழக்கறிஞராக பணியை தொடர்ந்தார்.
அக்டோபர் 13, 2014 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், பிப்ரவரி 1, 2016 அன்று நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
அக்டோபர் 11, 2021 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியின் போது, யஷ்வந்த் வர்மா அரசியலமைப்புச் சட்டம், தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டங்கள், பெருநிறுவனச் சட்டங்கள், வரிவிதிப்பு உள்ளிட்ட வழக்குகளை கையாண்டுள்ளார். allahabad bar counsil against judge Yashwant Varma