2019ஆம் ஆண்டு பலவிதமான திரைப்படங்கள் சினிமா ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும், கன்னட திரையுலகிலிருந்து ரிலீஸாகி இந்தியத் திரையுலகையே அதிரவைத்த திரைப்படம் KGF. சிறந்த மேக்கிங், கதை சொல்லும் விதம், பின்னணி இசை, நடிப்பு என எல்லா வகையிலும் வெற்றியைப் பெற்ற KGF திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2020இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான படமாக KGF -Chapter 2 இருக்கிறது. காரணம், இந்த உலகத்திலிருந்து தனித்து பிரிக்கப்பட்ட மக்களுக்காக போராடி, அவர்களுக்கான உரிமையையும் மதிப்பையும் பெற்றுத்தருவான் கதையின் நாயகன். அதேபோல, இந்திய சினிமாவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கன்னட சினிமாவின், முதல் 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக KGF அமைந்தது. முதல் வாரத்தில் 60 கோடி வசூல், 50ஆவது நாளில் 250 கோடி வசூல் என அதிரடியாக மேலே ஏறிவந்த KGF, இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்தது. சினிமா உலகில் கிட்டத்தட்ட ஒரு புரட்சியையே நடத்திய KGF படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு, இந்திய ரசிகர்கள் பெரும்பான்மையானவர்கள் காத்திருக்கின்றனர் என்று கூட சொல்லலாம்.
தங்களது படைப்புக்கு இந்தளவுக்கான வெற்றியைக் கொடுத்த ரசிகர்களை ஏமாற்றாமல், உடனடியாக அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கியது படக்குழு. கிட்டத்தட்ட முக்கால்வாசி ஷூட்டிங்கை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளிலும் இறங்கிவிட்டது. எனவே, வருகிற 21ஆம் தேதியன்று இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். 2020ஆம் ஆண்டின் கோடைக்கால விடுமுறையில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.