நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு: எடப்பாடிக்கு செக் வைத்த பன்னீர்

Published On:

| By Prakash

அதிமுகவிலிருந்து, நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும்‌, மீண்டும்‌ அவரவர்‌ பொறுப்புகளில்‌ செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவருகிறார். அதுபோல், ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரை நீக்கியுள்ளார்.

இப்படி, அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அடுத்தடுத்து நீக்கியதால், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்துவருகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 23) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அதிமுகவிலிருந்து, பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும்‌, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும்‌ அவரவர்‌ பொறுப்புகளில்‌ செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.

ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்‌, தொகுதிச் செயலாளர்‌ மற்றும்‌ தொகுதி இணைச்‌ செயலாளர்கள்‌ பதவிகள்‌ மீண்டும்‌ தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள்‌ மீண்டும்‌ அந்தந்தப் பொறுப்புகளில்‌ பணியாற்ற அனுமதிக்கப்படுவர். மேலும், காலியாக உள்ள பொறுப்புகள்‌ விரைந்து நிரப்பப்படும். ஆகையால், கழக உடன்பிறப்புகள்‌ அனைவரும்‌ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள்‌, ஊராட்சி செயலாளர்கள்‌, தொகுதிக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ மற்றும்‌ தொகுதிக்‌ கழக இணைச்‌ செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

எடப்பாடிக்கு போட்டியாக தனக்கும் நிர்வாகிகள் பலம் வேண்டும் என்பதால் நீக்கப்பட்ட பதவிகளை மீண்டும் உருவாக்கியுள்ளார் ஓபிஎஸ். இதனால் எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்களுக்கு போட்டியாக ஓபிஎஸ் ஆதரவு தொகுதிச் செயலாளர்கள் செயல்படும் நிலை ஏற்படும். தேர்தல் ஆணையத்துக்கு இரு தரப்பும் சென்றிருக்கும் நிலையில் பன்னீரின் இந்த நடவடிக்கையால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share