மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று (ஜூன் 24) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மெதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மெய்தேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது.

மணிப்பூர் கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 400 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பற்றி எரியும் தீ மற்றும் வன்முறைகளுக்கு இடையில் தான் மணிப்பூர் மக்களின் ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதட்டம் நீடித்து வருகிறது.
தொடர்ந்து நீடிக்கும் இந்த வன்முறைகளில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான சொத்துக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு சென்று ஆய்வு செய்தும் அமைதியான சூழல் ஏற்படவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி 6 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20 ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று எகிப்து நாட்டிற்கு செல்ல உள்ளார்.
இதனால் பிரதமர் இல்லாத நேரத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்றால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடைபெறும் கூட்டம் பிரதமருக்கும் முக்கியமில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமின்றி மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது.
இந்த முக்கியமான கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது அவரது கோழைத்தனத்தையும் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்திருந்தார்.
மோனிஷா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தினை – ராகி டோக்ளா
டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கட்சிகளின் 3 ஆவது கூட்டம் சென்னையில்- ஸ்டாலின் ஸ்கெட்ச்!
”36 கட்சிகள் கூடிப் பேசினாலும் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை ”- வானதி சீனிவாசன்